இந்தியா (National)

சிந்துஜா, பாஸ்கர்

2 டன் தக்காளியை கடத்திய தமிழக தம்பதி கைது: ரூ.1½ லட்சத்துக்கு விற்றது அம்பலம்

Published On 2023-07-24 02:06 GMT   |   Update On 2023-07-24 02:06 GMT
  • விவசாயி மல்லேஷ் ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் அளித்தார்.
  • புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பெங்களூரு :

நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளிக்கு மவுசு கூடி உள்ள நிலையில், தற்போது அவற்றை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த விவசாயி மல்லேஷ் என்பவர் தான் விளைவித்த 2 டன் தக்காளியை கடந்த 8-ந்தேதி சரக்கு வாகனத்தில் கோலார் மாவட்டத்திற்கு விற்பனைக்கு எடுத்து சென்றார்.

அந்த சரக்கு வாகனம் பெங்களூரு எலகங்கா அருகே ஹெப்பால் சாலையில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்மகும்பல் வழிமறித்தது. பின்னர் காரில் இருந்து இறங்கிய கும்பல், விவசாயி மல்லேஷ் மற்றும் டிரைவரை தாக்கி கீழே தள்ளினர். இதையடுத்து 2 டன் தக்காளியை சரக்கு வாகனத்துடன் அவர்கள் கடத்தி சென்றனர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மல்லேஷ், ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடிவந்தனர். அப்போது போலீசார் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த பாஸ்கர் (வயது 38) மற்றும் அவரது மனைவி சிந்துஜா(36) என்பது தெரிந்தது. அவர்கள் தங்கள் கூட்டாளிகள் உதவியுடன் தக்காளி பாரத்துடன் வந்த சரக்கு வாகனத்தை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அதை விற்பனை செய்வது குறித்து ஆலோசித்துள்ளனர்.

அதன்படி அவர்கள் சென்னைக்கு கொண்டு வந்து 2 டன் தக்காளியையும் விற்று ரூ.1½ லட்சம் சம்பாதித்து உள்ளனர். மேலும் அந்த பணத்தை தம்பதி உள்பட 5 பேரும் பங்குபோட்டு கொண்டு மீண்டும் சரக்கு வாகனத்தை பெங்களூருவுக்கு எடுத்து வந்துள்ளனர். போலீசிடம் இருந்து தப்பிக்க, அவர்கள் சரக்கு வாகனத்தை தேவனஹள்ளி புறநகர் பகுதியில் நிறுத்தியது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், போலீசார் காலி சரக்கு வாகனத்தை மீட்டனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News