கேரளாவிற்காக பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தையாவது உச்சரித்தார்களா?: காங்கிரஸ் கூட்டணியை விளாசிய பினராயி விஜயன்
- 2019-ல் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 18 பேர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
- நாங்கள் கேட்க விரும்புவதெல்லாம் அவர்கள் யாராவது ஒருவர் கேரள மாநில நலத்திற்கான நின்றார்களா?.
கேரளா மாநிலத்தில் வருகிற 26-ந்தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 20 தொகுதிகளை கைப்பற்றுது யார் என்பதில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், இடதுசாரி கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளது. தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் தனித்தனியாக போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இடசாரிகளையும், இடதுசாரி கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், கேரள மாநில நலனிற்காக அவர்கள் நிற்கவில்லை என பினராயி விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில் "2019-ல் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 18 பேர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர். பாராளுமன்றத்தில் அவர்கள் மத்திய அரசை விமர்சனம் செய்வது தொடர்பாக அவர்கள் கவலைப்படவில்லை. நாங்கள் கேட்க விரும்புவதெல்லாம் அவர்கள் யாராவது ஒருவர் கேரள மாநில நலத்திற்கான நின்றார்களா? அவர்கள் ஆர்எஸ்எஸ் எஜென்டாவுடன் நின்றார்கள். கேரளாவிற்காக ஒரு வார்த்தையாவது உச்சரித்தார்களா?.
பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் தவறுகளுக்கு இடதுசாரி அரசை குறை கூற விரும்பினார்கள். சங்பரிவார் தனது திட்டத்தை செயல்படுத்தும்போது, மதசார்பற்ற எண்ணம் கொண்டவர்கள் அதை எதிர்க்கிறார்கள். ராகுல் காந்தி மதசார்பற்ற நபரா? சங்பரிவார் மனநிலை கொண்ட ஒருவரா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். சிஏஏ போன்ற சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் எப்படி போராட்டம் நடத்தாமல் இருக்க முடிகிறது.?
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.