இந்தியா

(கோப்பு படம்)

பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும் நடைமுறையை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கை

Published On 2022-12-28 22:15 GMT   |   Update On 2022-12-28 22:16 GMT
  • இந்தியாவில் மறு விற்பனை கார் சந்தை படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
  • தற்போதைய சூழலில், வாகனத்தை அடுத்தடுத்த நபர்களுக்கு மாற்றுவதில் பல சிக்கல்கள் உள்ளன.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் மறுவிற்பனைக்கான கார் சந்தை படிப்படியாக முன்னேறி வருகிறது. அண்மை காலமாக, மறு விற்பனைக்கான வாகனங்களை வாங்குதல் மற்றும் விற்பதில் ஈடுபட்டுள்ள ஆன்லைன் சந்தைகளின் வருகை இந்த சந்தைக்கு மேலும் ஊக்கத்தை அளித்துள்ளது.

தற்போதைய சூழலில், வாகனத்தை அடுத்தடுத்த நபர்களுக்கு மாற்றுவது, மூன்றாம் தரப்பு சேதப் பொறுப்புகள் தொடர்பான சர்ச்சைகள், கடனைத் திருப்பிச் செலுத்தாதவரை தீர்மானிப்பதில் சிரமம் போன்ற பல சிக்கல்கள் எதிர்கொள்ளப்படுகின்றன.

எனவே, மறுவிற்பனைக் கார் சந்தைக்கு விரிவான ஒழுங்குமுறைச் சூழலைக் கட்டமைக்க 1989 ஆம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன விதிகள் பகுதி III, தற்போது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் திருத்தப்பட்டுள்ளது. 


அதன்படி பதிவு செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வது மற்றும் வாங்குவது தொடர்பான வணிகத்தை எளிதாக்கவும், அதன் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் ஜி.எஸ்.ஆர். 901(இ) அறிவிப்பு கடந்த டிசம்பர் 22ந் தேதி அன்று வெளியிட்டது.

அதன்படி ஒரு வியாபாரியின் நம்பகத்தன்மையை அடையாளம் காண, பதிவு செய்யப்பட்ட வாகன வியாபாரிகளுக்கான அங்கீகார சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வியாபாரிகள் தங்கள் வசம் உள்ள மோட்டார் வாகனங்களின் பதிவுச் சான்றிதழைப் புதுப்பித்தல், தகுதிச் சான்றிதழைப் புதுப்பித்தல், நகல் பதிவுச் சான்றிதழ், தடையின்மைச் சான்றிதழ், உரிமையை மாற்றுதல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க அதிகாரம் பெறுகின்றனர்.

மேலும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையின் பகுதியாக, மின்னணு வாகனப் பயணப் பதிவேட்டைப் பராமரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, அதில் மேற்கொள்ளப்படும் பயணம், பயணத்தின் நோக்கம், ஓட்டுனர், நேரம், பயணதூரம் போன்ற விவரங்கள் இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News