அகிலேஷ் யாதவ் சகோதரர் மனைவிக்கு உ.பி. மாநில பெண்கள் ஆணைய துணைத் தலைவர் பதவி
- பெண்கள் ஆணைய துணைத் தலைவர் பதவி ஒரு வருட கால பதவியாகும்.
- இல்லையெனில் உ.பி. அரசு முடிவு எடுக்கும் வரை பதவியில் நீடிக்க முடியும்.
உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உ.பி.யில் பாஜக-வுக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையில்தான் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சி தலைவர்களும் பரஸ்பர கருத்து விமர்சனங்களவை முன்வைப்பது உண்டு. இதனால் அரசியலில் எலியும் பூனையுமாக திகழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் மாநில பெண்கள் ஆணையத்தின் துணைத் தலைவராக அகிலேஷ் யாதவின் சகோதரர் மனைவி அபர்னா யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல், பபிதா சவுகானை தலைவராகவும், அபர்னா யாதவ் மற்றும் சாரு சவுத்ரி ஆகியோரை துணைத் தலைவராகவும் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இவர்களுடைய பதவிக்காலம் ஒரு வருடம் அல்லது உ.பி. அரசு முடிவு எடுக்கும்வரை ஆகும்.
சமாஜ்வாடி கட்சியை நிறுவிய மறைந்த முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்னா யாதவ் ஆவார். இவர் பிரதீக் யாதவ் மனவைி ஆவார். அகிலேஷ் யாதவின் வளர்ப்பு சசோதரர் பிரதீக் யாதவ் ஆவார்.
அபர்னா யாதவ் 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பில் லக்கோன் கான்ட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2022-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.