இந்தியா

காட்டாற்று வெள்ளத்துக்கு யானைகளும் தப்பவில்லை- வயநாடு நிலச்சரிவால் தொடரும் சோகம்

Published On 2024-08-02 02:04 GMT   |   Update On 2024-08-02 02:04 GMT
  • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மான்கள் செத்து கிடந்தன.
  • தொடர் மழையால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.

வயநாடு:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த 30-ம் தேதி அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியது. இந்த காட்டாற்று வெள்ளம் வனப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. அங்கு காட்டுயானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளும் அடித்து செல்லப்பட்டன. அவை அருகில் உள்ள சாலியாற்றில் தத்தளித்து சென்றதை உள்ளூர்வாசிகள் பார்த்து உள்ளனர். குறிப்பாக போத்துக்கல் பகுதியில் உள்ள சாலியாற்றில் மான்கள் கூட்டம் அடித்து செல்லப்பட்டது.

மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மான்கள் செத்து கிடந்தன. அத்துடன் நிலம்பூர் பகுதியில் 3 காட்டுயானைகள் சாலியாற்றில் தத்தளித்து சென்றன.அதில் ஒரு யானை பாறை மீது ஏறி நின்றது. மீதமுள்ள 2 யானைகள் நீந்தி சென்று கரையேறின. இதனால் அவை உயிர் தப்பின.

இது தவிர திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அருகே காலடி தோட்ட பகுதியில் உள்ள சாலக்குடி ஆற்றில் காட்டுயானை ஒன்று செத்து ஒதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனச்சரகர் மேத்யூ தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வாழைச்சால் பகுதியில் இரும்பு பாலத்தின் அடியில் காட்டுயானையின் உடல் ஒதுங்கி கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தொடர் மழையால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. ஆற்றை கடக்க முயன்ற போதோ அல்லது வெள்ளத்தில் அடித்து வரப்பட்டோ காட்டுயானை இறந்து இருக்கலாம். இறந்த யானைக்கு 15 வயது இருக்கும் என்றனர்.

Tags:    

Similar News