நிலச்சரிவில் இருந்து தப்பியது எப்படி?: உயிர் பிழைத்தோரின் பதைபதைக்கும் பேட்டி
- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு வேதனை அளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
- நிலச்சரிவில் சிக்கியவர்களைக் மீட்பதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு வேதனை அளிக்கிறது என அத்தொகுதியின் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்காமல் உயிர் பிழைத்தவர்கள் தங்களின் துயர அனுபவங்களை விவரிக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:
வயநாடு நிலச்சரிவில் வீடு இடிந்த தம்பதியினர், இரவு 11 மணியளவில் தங்கள் பகுதியில் சேறும் சகதியுமாக ஓடுவதைக் கண்டு வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் அருகில் உள்ள ஒரு மலையில் தஞ்சம் புகுந்தனர். அவர்களது அண்டை வீட்டாரைக் காப்பாற்ற முயற்சித்து அவர்களையும் அழைத்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து வர மறுத்துவிட்டனர்.
நாங்கள் அவரை எங்களுடன் வரும்படி கெஞ்சினோம். ஆனால் அவர் அதிகாலை 1 மணிக்கு எங்களுடன் சேருவார் என கூறினார். அவர் வரவே இல்லை. காலை வரை மலை உச்சியில் காத்திருந்த அவர்கள் திரும்பி வந்தபோது அந்த பகுதி முழுவதும் அடித்து செல்லப்பட்டது என சோகத்துடன் தெரிவித்தனர்.
இதேபோல், உயிர் பிழைத்த மற்றொரு பெண் கூறுகையில், உறவினர் ஒருவர் அவர்களது குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டிலிருந்து ஓடினார். இரவில் எனக்கு போன் செய்து அவர்கள் இப்பகுதியில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதாக கூறினார். அதற்கு பிறகு அவர்களை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்தக் குடும்பம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பதைபதைக்க தெரிவித்தார்.