இந்தியா

உள்துறை மந்திரி சொன்ன பிறகு... நிலச்சரிவு எச்சரிக்கை தொடர்பான கேள்விக்கு கேரள மாநில ஆளுநரின் பதில்

Published On 2024-08-01 12:14 GMT   |   Update On 2024-08-01 12:14 GMT
  • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முதல் கிராமத்த நாங்கள் இன்னும் சென்றடையவில்லை.
  • சாலியார் ஆறு தனது போக்கை மாற்றியதால் கிராமங்கள் நாசமாக்கப்பட்டன.

கேரள மாநிலம் வயநாட்டில் 29-ந்தேதி கனமழை பெய்தது. மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மீட்புப்பணி இன்னும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், நிலச்சரிவு மீட்புப்பணி, பாதிக்கப்பட்ட கிராமங்கள் குறித்து கூறியதாவது:-

உயிரிழந்தவர்களின் பெரும்பாலான உடல்கள் கிராமத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கிராமங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதற்கு காரணம் சாலியார் ஆறுதான். இந்த ஆறு நிலச்சரிவு காரணமாக தனது போக்கை மாற்றியது. இதனால் கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்து சூறையாடிவிட்டன. இருந்தபோதிலும் நிலச்சரிவால் நாசமான முதல் கிராமத்தை இன்னும் நாங்கள் சென்றடையவில்லை.

ஏனென்றால் நிலச்சரிவால் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. ராணுவ பொறியாளர்கள் குழு பெய்லி பிரிட்ஜ் (குறுகிய பாலம்) கட்டிக்கொண்டு வருகிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் இந்த பாலம் கட்டும் பணி முடிவடையும். பாலம் கட்டப்படும் வரை சேத அளவை சரியாக மதிப்பிட முடியாது. ஏனென்றால், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முதல் இடத்தை நாங்கள் இன்னும் சென்றடையவில்லை.

முதலில் பாதிக்கப்பட்ட கிராமம் ரிமோட் (நகரத்தில் இருந்து மிகத் தொலையில் எளிதாக தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில்) கிராமம் கிடையாது. அது மலைப்பகுதி. இருந்தபோதிலும் ரிமோட் கிடையாது. நகரப் பகுதியின் ஒருபகுதி. 100 வருட பழமையாக குடியிருப்புகள் கொண்டது.

தற்போது மீட்புப்பணி மற்றும் நிவாரணம் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லோரும் அங்கே அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆறு தன்னுடைய போக்கை மாற்றியுள்ளது. மீண்டும் பழைய இடத்திற்கு போக்கை மாற்றலாம். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல. ஆற்றங்கரையோரம் உள்ளவர்களும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், அமித் ஷா ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், 30-ந்தேதி காலையில்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார். இந்த விசயத்தில் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துபோல் தெரிகிறதே? என்ற கேள்விக்கு "இந்த விஷயங்களைக் கணக்கிடுவதற்கு நேற்று நேரம் இல்லை. எனவே அந்தப் பிரச்சினைக்குள் நான் செல்லக்கூடிய நிலையில் இல்லை. நோயாளிகள், அவர்களது உறவினர்களை சந்திக்க, மக்களின் துக்கத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது..

உள்துறை மந்திரி அமித் ஷா எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அதில் சந்தேகம் அடைய எனக்கு எந்த காரணமும் இல்லை" என்றார்.

Tags:    

Similar News