ஜார்கண்ட் முதல்வராகும் சம்பாய் சோரன் யார் தெரியுமா?
- முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
- சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் ஹேமந்த் சோரன் கொண்டுவரப்பட்டார். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பாய் சோரன் பற்றிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி துவங்கப்பட்ட காலத்தில் இருந்து, ஹேமந்த் சோரனின் தந்தை ஷிபு சோரனுடன் கட்சியில் இருந்து வருபவர் சம்பாய் சோரன்.
தற்போது ஜார்கண்ட் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பழங்குடியினர், பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர், நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். சம்பாய் சோரனின் தந்தை சிமல் சோரன் விவசாயி ஆவார். இவர் சரைகேளா கார்சவான் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
"எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பா.ஜ.க. அரசு மத்திய அமைப்புகளை கொண்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைக்க நினைக்கிறது. ஆனால், நாங்கள் அதற்கு இடம்கொடுக்க மாட்டோம்," என சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.