சிறப்புக் கட்டுரைகள்

ஆன்மிக வாழ்வில் அழகிய புறாக்கள்

Published On 2024-06-06 08:17 GMT   |   Update On 2024-06-06 08:17 GMT
  • கபோதகம்’ என்றால் புறா என்று பொருள்.
  • பல ஆன்மிகக் கதைகளில் புறாக்கள் பாத்திரங்களாக வருகின்றன.

நமது ஆன்மிக நெடும்பரப்பில் படபடத்துப் பறக்கும் பறவையினங்களில் முக்கியமான ஒன்று புறா. `விருந்தோம்பல், செய்நன்றியறிதல், சரணடைந்தோரைக் காப்பாற்றுதல்' போன்ற உயரிய விழுமியங்களை உணர்த்துவதற்குக் கூறப்படும் பல ஆன்மிகக் கதைகளில் புறாக்கள் பாத்திரங்களாக வருகின்றன. தங்கள் பேச்சாலும் செய்கையாலும் அவை மனித குலத்திற்குப் பற்பல அறநெறிகளை எடுத்துச் சொல்கின்றன.

இரண்டு புறாக்கள் செய்த தியாகத்தைப் பற்றி உருக்கமாக விவரிக்கிறது `கபோத உபாக்யானம்' என்ற சமஸ்கிருத நூல்.

`கபோதகம்' என்றால் புறா என்று பொருள். `உபாக்யானம்' என்றால் சிறிய கதை. விருந்தோம்பலின் உயர்வைச் சொல்லும் அந்த அழகிய சிறிய கதை சுவாரஸ்யமானது.

வேடன் ஒருவன் காட்டில் வேட்டையாட வந்தான். வலை வீசி ஒரு பெண் புறாவைப் பிடித்தான்.

அப்போது திடீரெனக் கடும் மழை பொழியத் தொடங்கியது. வலையில் பிடிபட்ட பெண் புறாவும் அதன் ஜோடியான ஆண் புறாவும் எந்த மரத்தில் வசித்தனவோ அந்த மரத்தடியிலேயே அவன் மழைக்கு ஒதுங்கி நின்றான்.

சிறிது நேரத்தில் மழை நின்றது. ஆனால் அதற்குள் கானகத்தில் இருள் சூழ்ந்துவிட்டது. இருளில் எப்படி திரும்பிப் போகும் வழியைக் கண்டுபிடிப்பது?

ஒரே குளிர் வேறு. வேடனால் உடனே அங்கிருந்து புறப்பட முடியவில்லை. குளிரில் உடல் நடுங்கவே அந்த மரத்தடியிலேயே ஒடுங்கி உட்கார்ந்து விட்டான்.

இதைப் பார்த்தது மரத்தின் மேலிருந்த ஆண் புறா. தன் ஜோடியான பெண் புறாவை வலைவீசிப் பிடித்தவன் அவன் என்பதை அது தெரிந்து கொண்டது.

ஆனாலும் அவனுக்கு அந்த ஆண் புறா கெடுதல் நினைக்க வில்லை. நம் பாரத தேசத்தின் மிக உயர்ந்த விருந்தோம்பல் பண்பு அந்தச் சிறிய பறவை யிடமும் குடிகொண்டிருந்ததுதான் ஆச்சரியம்.

என்ன செய்வது இப்போது? நாம் வசிக்கிற மரத்தின் கீழ் இவன் வந்துவிட்டான். அதனால் இவன் நம் விருந்தாளி ஆகிறான். `அதிதி தேவோ பவ! விருந்தாளியைத் தெய்வமாக நினை' என்கிறதே வேதம்!

`இந்த விருந்தாளிக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்' என்று நினைத்தது அந்த ஆண்புறா.

முதலில் குளிரில் நடுங்குகிறவனின் குளிரைப் போக்க வேண்டும். தன் கூட்டையே பிரித்து அதிலிருந்த காய்ந்த குச்சிகளை அலகால் தூக்கிவந்து வேடனுக்கு முன்னால் போட்டது. அவன் நெருப்பு மூட்டிக் கொள்ள உதவியாக சிக்கி முக்கிக் கற்களையும் தேடிக் கொண்டுவந்து அவன்முன் போட்டது.

ஆண்புறாவின் செயல்களைப் பார்த்துக் கொண்டே இருந்த வேடன் வியப்படைந்தான். சிக்கிமுக்கிக் கற்களை உரசி நெருப்பு உண்டாக்கி அந்த நெருப்பில் சுள்ளிகளைப் பற்றவைத்துக் குளிர் காயலானான்.

கூடவே அவன் மனத்தில் யோசனைகள் ஓடின. ஒரு புறா தனக்கு இத்தனை உதவி செய்கிறதே என அவன் மனம் இளகியது. தான் வலையில் பிடித்திருந்த அதனுடைய பெண் துணையை வெளியே விட்டு விட்டான்.

பெண்புறா பறந்து தப்பிக்கவில்லை. 'விருந்தோம்பல் என்றால் சாப்பாடு போடுவதுதான். இந்த வேடன் நம் விருந்தா ளியாக வந்துவிட்டுப் பட்டினி கிடக்கி றானே? இவனுடைய பசியைப் போக்குவதே நம் தர்மம்' என்று நினைத்தது பெண் புறா.

`வேடனே, உன் பசிதீர என்னை உணவாக எடுத்துக்கொள்' என்று சொல்லி அந்த நெருப்பில் சடாரென விழுந்து உயிர்த்தியாகம் செய்துவிட்டது.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அதனுடைய ஜோடிப் பறவை `என்னையும் உணவாக ஏற்றுக்கொள்' என்று சொன்னவாறே தானும் அந்த நெருப்பிலேயே விழுந்து தன்னையும் அவனுக்கு உணவாக அளித்துவிட்டது.

திகைத்துப்போன வேடன் சிந்தனையில் ஆழ்ந்தான். பறவைகளுக்கு இத்தகைய பண்பு நலனா? என்று எண்ணியெண்ணி வியந்தான். தன் வில்லையும் அம்பையும் ஒடித்துப் போட்டுவிட்டான்.

அன்றுமுதல் அவன் வேட்டையாடுவதையே விட்டுவிட்டான். விருந்தோம்பலின் சிறப்பை புறாக்களைப் பாத்திரங்களாக்கிச் சொன்ன பழைய கதை இது.

சரணடைந்தவரை என்ன செய்தாகிலும் காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைச் சொல்கிறது சோழ வம்சத்தின் முன்னோரான சிபிச் சக்கரவர்த்தியின் வரலாற்றில் வரும் நிகழ்ச்சி.

அவனது அரண்மனையின் மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது ஒரு பருந்து. அதன் விழிகள் கீழே தனக்கு இரை கிட்டுமா எனப் பார்த்துக் கொண்டிருந்தன.

அரண்மனை முற்றத்தில் ஒரு புறா தரையில் சிந்தியிருந்த தானியங்களைக் கொத்தித் தின்று கொண்டிருந்தது.

இரை தின்னும் புறாவை இரையாக்கிக் கொள்ள நினைத்த பருந்து மேலிருந்து கீழே சடாரென இறங்கியது.

பருந்திடமிருந்து தப்பிக்க வேண்டுமே? என்ன செய்வது இப்போது? தர்மநெறி தவறாத சிபிச் சக்கரவர்த்தியைச் சரணடைவோம். இப்படி எண்ணிய புறா, விருட்டென அரண்ம னைக்குள் பறந்து சென்று ராஜசபையில் வீற்றிருந்த சிபிச் சக்கரவர்த்தியின் பாதங்களின் கீழ் தஞ்சமடைந்து அமர்ந்துகொண்டது. அதன் உடல் அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது.

சரணடைந்த புறாவை அன்போடு எடுத்து அதன் உடலின் நடுக்கத்தை நீக்கும் வகையில் ஆதரவோடு அதன் முதுகைத் தடவிக் கொடுத்தான் அரசன்.

இதன் அச்சத்திற்குக் காரணம் என்ன என மன்னன் யோசிப்பதற்குள் அந்தக் காரணம் அவன் முன்னே பறந்துவந்து நின்றது! புறாவைத் துரத்திக் கொண்டுவந்த பருந்து மன்னனிடம் கடுமையான குரலில் பேசலாயிற்று.

`புறா என் இரை. அதை நான் தின்னக் கொடுத்துவிடு.'

`சாத்தியமே இல்லை பருந்தே! என்னைச் சரணடைந்துள்ளது இந்தப் புறா. சரணடைந்தவர்களைக் காப்பாற்றுவதே தர்ம நெறி. அப்படிச் செய்யாவிட்டால் பெரும் பாவம் என்னை வந்து சேரும்.`

`புறாவைக் காப்பாற்றினால் என்னைப் பட்டினி போட்ட தேவை உன்னை வந்து சேரும். எந்தப் பாவம் தேவலாம் எனச் சிந்தித்துச் செயல்படு!` என்று அதட்டியது பருந்து.

மன்னன் தீவிரமாக யோசித்தான். இரண்டு பாவங்களும் தனக்குச் சேராமல் இருக்க என்ன வழி? புறாவும் இறக்கக் கூடாது. பருந்தும் பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதானே?

ஏவலரை அழைத்து ஒரு தராசைக் கொண்டுவரச் சொன்னான். தராசின் ஒரு தட்டில் புறாவை அமர்த்தினான். தன் வாளை உருவி தன் காலின் தொடைச் சதையை வெட்டி எடுத்து இன்னொரு தட்டில் வைத்தான்.

சமமான எடையளவு சதை தட்டில் வைக்கப்பட்டதும் `இந்த மாமிசத்தை உணவாக எடுத்துக் கொண்டு போ. புறாவைத் தொடாதே!` என்றான் மன்னன்.

இந்தச் செய்தி பழைய தமிழ் இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற மன்னனின் கொடைச் சிறப்பைப் பற்றிப் பேசும்போது, `பருந்துக்குத் தன் சதையை உணவாகக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியின் மரபில் வந்தவன்' என்கிறது புறநானூறு. புலவர் மாறோக்கத்து நப்பசலையார், புலவர் கோவூர் கிழார் இருவரும் இந்தச் செய்தியைத் தங்கள் பாடல்களில் பேசுகிறார்கள்.

சிலப்பதிகாரத்தில் தன் கணவன் கொலைக்குப் பாண்டிய மன்னனிடம் நியாயம் கேட்கும் கண்ணகி, தான் பிறந்த சோழநாட்டு மன்னனின் அருளாட்சி பற்றி விவரிக்கும்போது சிபிச் சக்கரவர்த்தி புறாவைக் காப்பாற்றிய வரலாற்றை எடுத்துரைக்கிறாள்.

`சரணடைந்தோரைக் காப்பாற்றும் சிபிச் சக்கரவர்த்தியின் நாட்டில் இருந்து வந்தி ருக்கிறேன். ஒரு புறாவைக் காப்பாற்றிய அவன் எங்கே? என் கணவனை கொலை உண்ணக் காரணமான நீ எங்கே?` என்பதுதான் கண்ணகி கேட்ட கேள்வியின் மறைபொருள்.

செய்ந்நன்றியறிதல் என்ற உயரிய குணத்தை விளக்கவும் புறாவைப் பாத்திரமாகக் கொண்ட ஒரு கதை சொல்லப்படுகிறது.

பொய்கைக் கரையில் வளர்ந்தி ருந்த ஒரு மரத்தின் மேல் அமர்ந்திருந்தது ஒரு புறா. கீழே குளத்தில் ஒரு கட்டெறும்பு எப்படியோ விழுந்து தத்தளித்துக் கொண்டி ருப்பதைப் பார்த்தது அது.

புறாவின் மனத்தில் இரக்கம் பொங்கியது. எப்படியாவது இந்த எறும்பைக் காப்பாற்ற வேண்டுமே? மரத்தில் இருந்து ஓர் இலையை அலகால் கொத்திப் பறித்து, எறும்பின் அருகே விழுமாறு குளத்து நீரில் வீசியது.

கட்டெறும்பு மெல்லத் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. இலை காற்றில் அசைந்தசைந்து கரையில் ஒதுங்கிய போது எறும்பும் உயிர் போகாமல் கரைசேர்ந்து விட்டது. மேலே கிளையில் அமர்ந்து தன்னைக் காப்பாற்றிய மேலான செயலைச் செய்த புறாவை நன்றியோடு பார்த்தது எறும்பு.

காலம் கொஞ்சம் சென்றது. பொய்கைக் கரைக்கு வந்தான் ஒரு வேடன். அதே புறா அன்று மரக்கிளை ஒன்றில் தன்னை மறந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. வேடன் ஒலியெழுப்பாமல் வில்லில் அம்பைப் பூட்டினான். புறாமேல் எய்ய வேண்டிக் குறிபார்த்தான்.

அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டது கட்டெறும்பு. என்ன இது? புறா வேடனைக் கவனிக்கவே இல்லையே? தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைத் தான் காப்பாற்ற வேண்டுமே?

யோசித்த கட்டெறும்பு, ஊர்ந்துவந்து வேடனின் காலை நறுக்கெனக் கடித்தது. ஆ என அலறினான் வேடன். அவன் வைத்த குறி தவறி அம்பு புறாவைத் தாக்காமல் எங்கோ போய் விழுந்தது. அவன் அலறல் ஒலிகேட்டு திகைத்த புறா பறந்துசென்று தப்பித்துக் கொண்டது.

நாம் ஒருவருக்கு நன்மை செய்தால் அது நமக்கே திரும்ப வரும் என்ற நீதியைச் சொல்லும் இக்கதை பஞ்சதந்திரக் கதைகளில் ஒன்று.

புறாக்கள் காலம் காலமாக நம் மனத்தில் பற்பல ஆன்மிகச் சிந்தனைகளை எழுப்புகின்றன. புறாக்கள் தூது செல்லப் பயன்பட்டிருக்கின்றன. சமாதானச் சின்னமாகவும் கொண்டாடப்படுகின்றன. சண்டையிடாமல் சமாதானமாக இருப்பதிலும் விருந்தினர்களை உபசரிப்பதிலும் துன்பத்தில் ஆழ்வோருக்கு உதவி செய்வதிலும் நாம் புறாக்களைப் பின்பற்றலாம்.

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News