சிறப்புக் கட்டுரைகள்

அறிவுரை வழங்குவதும் பெறுவதும்!

Published On 2024-07-21 08:50 GMT   |   Update On 2024-07-21 08:50 GMT
  • இயந்திர அறிவுரைகளில் மனிதம் கரைந்திருப்பதில்லை.
  • குடும்பத்தின் மூத்தவர்களிடம் சென்று ஆலோசனைகள் பெறுவது ஆறுதலைத் தரும்.

அறிவுரை வழங்குவதிலும் பெறுவதிலும் ஆர்வம் காட்டும் அன்பு நேயர்களே! வணக்கம்!.

வாழ்க்கையில் ஒரு செயல் குறித்தோ, அல்லது ஒரு பொருள் குறித்தோ தெளிவான ஒரு சிந்தனை தோன்றாமல் குழப்பமாகவோ, பிரச்சினை போலவோ தோன்றினால் அது குறித்த ஐயத்தை உரிய அனுபவசாலிகளிடமும் அறிவாளர்களிடமும் கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்வது நல்லது. இவ்வாறு அடுத்தவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்வதை, அறிவுரை அல்லது ஆலோசனை என்று கூறலாம்.

இப்படிச் சென்றால் இங்கே செல்லலாம்; இதை செய்தால் இது நடக்கும்; இதற்கு இதுவே பதில் என்பதுபோல அமைவதெல்லாம் அறிவிப்புகள் அல்லது வழிகாட்டிப் பலகைகள் போல அமையுமேயொழிய அவை ஆலோசனைகள் போலவோ அல்லது அறிவுரைகளாகவோ அமையாது.

அறிவுரைகள் அல்லது ஆலோசனைகள் என்பவை ஒன்றிற்கும் மேற்பட்ட வினாக்களுக்கு விடையளிப்பனவாகவோ, தெரியா விடைகளுக்கும் பதிலளிப்பனவாகவோ, குழப்பங்களை தெளிவிப்பனவாகவோ இருக்க வேண்டும்.

இன்றைய உலகில் அறிவுரைகள் வழங்குவ தற்கும் ஆலோசனைகள் சொல்வதற்கும் நிறையப்பேர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கேட்பதற்குத்தான் மக்கள் சுருங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் கூறுவதை விட இணையம் கூறும் ஆலோசனைகளும் காட்டும் வழிகளும் துல்லியமாக இருப்பதாக இன்றைய இளைய தலைமுறை நம்பத் தொடங்கிவிட்டது.

மனிதர்கள் கூறுவதில் தற்சார்பு கலந்திருக்கும் எனவும், இயந்திரங்கள் கூறுவதில் வேண்டுதல் வேண்டாமை கலந்திருக்காது எனவும் கூறுகிறோம். ஆனால் மனிதர்கள் கூறும் அறிவுரையிலும் ஆலோசனையிலும் அவர்களின் இதய உணர்வு கலந்திருப்பதுபோல, இதயமில்லாத இயந்திர அறிவுரைகளில் மனிதம் கரைந்திருப்பதில்லை.

அறிவுரைகளும் ஆலோசனை

களும் பலதரப்பட்டவை ஆகும். அலுவலகம் சார்ந்தவை; இல்லறம் சார்ந்தவை, சமூகம் சார்ந்தவை, ஆன்மீகம் சார்ந்தவை, மருத்துவம் சார்ந்தவை, கல்விநிலை சார்ந் தவை, வியாபாரம் சார்ந்தவை, தொழில் சார்ந்தவை, பயணம் சார்ந்தவை, விளையாட்டு சார்ந்தவை, பொழுதுபோக்கு சார்ந்தவை என்று பலநிலைகளில் அவை கிளைபரப்பி நிற்கின்றன.

அறிவுரை கூறுபவர், மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூறுவதற்கு முன், அதற்கான முழுத்தகுதியும் அறிவும் அனுபவமும் தமக்கு இருக்கின்றதா என்பதை உணர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டு கூற முற்பட வேண்டும்.

அப்படிக் கூறினால், அவற்றின்மூலம் கேட்பவர் முழுப்பலனையும் பெற்று முழு ஆளுமையுடையவர்களாக மாற வாய்ப்பு ஏற்படும். அதேபோல ஒருவரிடம் ஆலோசனையோ அறிவுரையோ கேட்கும்போது,'உடையார்முன் இல்லார் போலப்' பணிவுடனும், முழுக்கவனத்துடனும், உரிய மரியாதையுடனும் கேட்க வேண்டும்.

அப்போதுதான் நமக்கான ஆலோசனை கூறுபவர்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் அறிவுரை வழங்குவார்கள். கேட்பவர் சொல்பவர் மனோபாவங்களைப் பொறுத்து அறிவுரைகளின் ஆழ்ந்த பொருள்தன்மை அமையும். வழங்குபவரும் கேட்பவரும் ஏனோதானோ என நடந்துகொண்டால் அறிவுரைகளும் ஏனோ தானோவென்று அமைந்துபோகும்.

அறிவுரை யாருக்கு வேண்டுமானாலும் தேவைப்படலாம். கற்றவர் கல்லாதவர், ஏழை பணக்காரர், வேலை பார்ப்பவர் பார்க்காதவர், சிறியவர் பெரியவர், ஆண்கள் பெண்கள் என எல்லா நிலைகளில் உள்ளவருக்கும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் தேவைப்படவே செய்யும். அதே போல அறிவுரையும் ஆலோசனையும் கூறும் தகுதி எல்லா நிலைகளில் உள்ளவருக்கும் உண்டு.

அறிவுரை கேட்பவரெல்லாம் தாழ்ந்தவர்கள் போலவும் சொல்பவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் போலவும் எண்ணிவிடக்கூடாது. ஆனாலும் எந்தத் துறையில் நமக்கு அறிவுரை தேவைப்படுகிறதோ, அந்த துறையைப் பொறுத்து வல்லுநரிடம் மட்டுமே நாம் ஆலோசனை கேட்கச் செல்லவேண்டும்.

பட்டப்படிப்பு முடித்த ஒருவர், தெருப்பெருக்கும் சாஸ்திரத்தைப்பற்றி ஓர் ஆலோசனை பெற விரும்பினால், அவரைவிடக் குறைவாகப் படித்த தெருப்பெருக்கும் தொழிலாளியிடம்தான் செல்லவேண்டும்; விஷயத்தைப் பெற்றுமுடிக்கும் வரை பணிவாகத் தான் இருக்க வேண்டும்; இன்னும் சொல்லப்போனால் அந்த சாஸ்திரம் கற்கும்வரை, அந்தத் தொழிலாளியாகவே மாறிவிடவும் வேண்டும்.

தேநீர் தயாரிக்கும் தொழிலாளியிடம் தேநீர் கடை முதலாளி "தேநீர் சரியில்லை; சுவையாகப் போடக் கற்றுக்கொள்!" என்கிறார். அந்தத் தேநீர் தயாரிப்பாளர் பத்தாண்டுகளாக அந்தத் தொழிலில் இருப்பவர்; விட்டால் அவர் பத்துப்பேருக்கு அந்த தொழிலைக் கற்றுத்தரும் நுட்பம் மிக்கவர்.

அவரிடம் 'நீ போடும் தேநீர் சரியில்லை' என்று பொத்தாம் பொதுவாக முதலாளி என்கிற தோரணையில் கூறினால் எப்படி?. தேநீர்த் தொழிலாளி முதலாளியிடம், "ஐயா! சரியாகத் தேநீர்த் தயாரிப்பது எப்படி?" என்று ஆலோசனை கேட்டால் அவர் எப்படிக் கூறுவார்?. முதலாளிகள் எல்லாம் தொழில் தெரிந்தவர்கள் என்று கூறிவிட முடியாதே!.

எனவே தகுதி உடையவரிடம் மட்டுமே ஆலோசனை கேட்கப்பட வேண்டும். நிறையப்படித்த மருத்துவரிடம் பொருளாதார ஆலோசனை கேட்க முடியுமா?. வரலாற்றுப் பேரறிஞரிடம் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அறிவுரையைக் கேட்டுப்பெற முடியுமா?.

அவ்வவற்றிற்கான வல்லுநர்கள் மாத்திரமே அவ்வவற்றிற்கான அறிவுரைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் உரிமையுடையவர்கள் என்பதைக் கேட்பவர்களும் வழங்குபவர்களும் உணரவேண்டும். தகுதியில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் பாராமல் அறிவுரை கூறும் விஷயத்தில் திறமை வாய்ந்தவரா? என்பதைப் பொறுத்து அணுகி அறிவுரை பெறுவது சரியானது.

குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் எழலாம்; தன்முனைப்பின் உச்சத்தில் கணவன் மனைவி இருவரும் ஏறிக்கொள்ளாமல் பணிந்து வந்து, இல்லற அனுபவத்தில் பழுத்துத் திகழும் குடும்பத்தின் மூத்தவர்களிடம் சென்று ஆலோசனைகள் பெறுவது ஆறுதலைத் தரும்.

சிலர் குடும்பநல ஆலோசகர்களாகப் படிப்பறிவின் அடிப்படையில் சில அறிவுரைகள் கூறலாம்; ஆயினும் பட்டறிவின் அடிப்படையில் பெறப்பட்டவைபோலப் பொருத்தமாக அவை உதவுவதில்லை. சிலர் இல்லறப் பிரச்சனைகளுக் கான தீர்வுகளை, இல்லறத்தைத் துறந்து வந்த சாமியார்களிடம் போய்க் கேட்கிறார்கள்; இல்லறம் பிடிக்காமல் வந்தவர்கள் எப்படி இல்லறப் பிரச்சினைகளுக்கான ஆலோசனைகள் கூற முடியும்?.

ஆன்மீகத்துறையில் ஈடுபடுவதற்கு இப்போதெல்லாம் எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சாமியார்கள் ஆகலாம். முறையான மரபுவழி வராத இவ்வகைப் புதுப்புதுச் சாமியார்களைச் சுற்றித்தான் நவீன பக்தர்கள்கூட்டம் அலை மோதிக் காத்துக் கிடக்கிறது; அவர்களும் அறிவுரைகளை அள்ளிவழங்கும் தாராள சீலர்களாக உருமாறி அருள்மாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் கிராமங்களில் தவறுசெய்யும் மனிதர்களுக்கு விதவிதமான தண்டனைகளை கிராமத்தாரே வழங்குவது வழக்கம். மானபங்கப் படுத்துவது என்றால் தவறிழைத்தவனின் மூக்கை அரிந்து விடுவது உச்சபட்சத் தண்டனை ஆகும். அதன்பிறகு அவன் அந்த ஊரில் தலைகாட்டி நடக்க முடியாது. ராமாயணத்தில்கூட சூர்ப்பணகையின் மூக்கை லட்சுமணன் அரிந்துவிடுவது அவளை மானபங்கப்படுத்தி அனுப்ப வழங்கிய தண்டனை ஆகும்.

அப்படி ஒரு ஊரில் மானபங்கப் படுத்தப்பட்ட மனிதன் ஒருவன், ஊருக்குள் மூக்கில்லாத முகத்துடன் வாழ வெட்கப்பட்டு, தொலை தூரத்திலிருந்த ஒரு காட்டிற்குள் சென்று வாழத் தொடங்கினான். முகம் அடையாளம் தெரியாமல் இருக்க தாடிமீசைகள் வளர்த்துக் கொண்டாலும், அறுபட்ட மூக்கு அவன் மானபங்கப்படுத்தப்பட்டதை விளக்கிக்கொண்டே இருந்தது. யாராவது மனித நடமாட்டம் தென்பட்டால் உடனே கைத்துண்டால் முகத்தை முழுமையாக மூடிக்கொண்டு தவம் செய்வதுபோல பாவலா செய்யத் தொடங்கினான்.

நாளடைவில், மக்கள் அவனுக்கு முகமூடி பாபா என்று பெயர்சூட்டி, அடிக்கடி வந்து அவனிடம் அருள்வாக்குக் கேட்கத் தொடங்கினர். அவன் சொன்னதெல்லாம் நடப்பதாக நம்பிய மனிதர்கள் பெருகத் தொடங்கினர்.

அவர்களில் பக்தி முத்திய மனிதனொருவன் அந்த மூக்கறுபட்ட சாமியாரிடம், "சாமி! நானும் உங்களைப்போல முகமூடி பாபாவாக ஆசைப்படுகிறேன்; எனக்கு அறிவுரை வழங்கி தீட்சை வழங்குங்கள்!" என்று கேட்டான். " நாளை வா! வழங்குகிறேன்!; வரும்போது நல்ல கூர்மையான புதிய கத்தி ஒன்றைக் கொண்டு வா!" என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.

ஆகா! நாமும் இன்றுமுதல் அந்தக் காட்டில் புதிய முகமூடி பாபாவாக அருள்வலம் வரலாம் என்கிற மகிழ்ச்சிப் பெருக்குடனும், பக்திப் பெருக்குடனும் கையில் புதிய கத்தியுடனும் வந்து சேர்ந்தான் அந்தச் சீடன். கத்தியைக் கையில் வாங்கிய அந்த முகமூடி போலிச் சாமியார், தனது முகத்துணியை விலக்கிவிட்டு, சீடனின் மூக்கைப் பிடித்துப், படக்கென்று அறுத்தெறிந்து விட்டார்.

வலியால் துடித்த சீடனைப் பார்த்து, "இந்த அறுபட்ட மூக்கால்தான் யாம் இந்த வனத்திற்கு வந்தோம், தவமும் புரிந்தோம்; இதோ அதே தீட்சையை யாமும் உமக்களித்தோம்; நீயும் உன் முகத்தில் சிறு துண்டைப்போட்டு மூடிக்கொண்டு குட்டி முகமூடி பாபாவாக உலா வந்து ஊரை ஏமாற்றக் கடவது!; இதுவே யாமுனக்கு வழங்கும் அறிவுரை!" என்று கூறிவிட்டு அடர்ந்த வனத்திற்குள் ஓடி மறைந்துவிட்டார்.

போலிச் சாமியாரைப் பார்த்தது தவறு! அவரை நம்பி அவரைப்போல ஆக வேண்டு மென்று தீட்சையும் அறிவுரையும் கேட்டது தவறு! இப்போது தண்டனையாக மூக்கறுபட்டதுதான் மிச்சம்! என்று தன்மீது குற்றம் சுமத்திக்கொண்டே நடக்கத் தொடங்கினான் சீடன்.

அறிவுரையும் ஆலோசனையும் கேட்பதற்கு முன்பாக, அவற்றை வழங்குவதற்கு உரிய தகுதி அந்த நபரிடம் முழுமையாக இருக்கிறதா? என்பதைப் புரிந்துகொண்டே செல்லவேண்டும். தகுதியற்ற மனிதர்களிடம் ஆலோசனை கேட்கச் சென்றால் அவர்கள் கெட்டது போலவே நாமும் கெடுவதற்கும் ஆலோசனை கூறிவிடுவர்.

கல்வியிற் பெரிய பட்டங்கள் பெற்றவர்கள் எல்லாம் கல்வியாளர்கள் இல்லை; பெரும் மருத்துவப்பட்டங்கள் வைத்திருப்பவர்கள் எல்லாம் சிறந்த மருத்துவர்கள் இல்லை; வியாபாரம் செய்பவர்கள் எல்லாம் சிறந்த வியாபாரிகள் அல்லர். இவர்களிடம் இருக்கின்ற அனுபவங்களும், அவைதந்த படிப்பினைகளுமே அவர்களை அந்தந்தத் துறைகளில் சிறந்தவர்கள் ஆக்கியிருக்கின்றன. அப்படி அனுபவத்தில் கரைகண்டவர்களே அறிவுரைகள் வழங்குவதற்கான முழுத்தகுதி உடையவர்கள்.

சிலர் வயதில் கல்வியில் மூத்தவர்களாக இருக்கலாம்; அந்தக்கால அறிவியல் தொழில்நுட்ப நடைமுறைகளில் கைதேர்ந்தவர்களாக இருக்கலாம்; ஆனால் இந்தக் கால டிஜிட்டல் யுகத்தோடு தாம் இணக்கமாக இருக்க வேண்டுமென்றால் இளைய தலைமுறையின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

அறிவுரைகளும் ஆலோசனைகளும் அறிவுச்செல்வங்கள்; நமது வாழ்வியல் நடைமுறைகளைச் சிக்கல்கள் ஏதுமின்றி நடத்திச் செல்லப் பெருமளவில் உதவுபவை. நமக்குத் தகுதிகள் இருந்தால் அடுத்தவர்க்கு வழங்குவதில் தயக்கம் காட்டக் கூடாது; அதே வேளையில், நாம் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற வேண்டுமென்றால் அதற்குரிய தகுதியான நபர்களிடமிருந்து மட்டுமே பெற வேண்டும்.

தொடர்புக்கு 9443190098.

Tags:    

Similar News