விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-நேபாளம் அணிகள் இன்று மோதல்

Published On 2023-09-04 06:05 GMT   |   Update On 2023-09-04 06:05 GMT
  • நேபாளம் குட்டி அணி என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டி அதிக அளவில் ரன் குவிக்க முயற்சிப்பார்கள்.
  • நேபாளத்தை பொறுத்தமட்டில் முடிந்த வரை சவால் அளிக்க முயற்சிப்பார்கள்.

பல்லகெலே:

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பல்லகெலேயில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 'ஏ' பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், நேபாளமும் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இந்த தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 66 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது. பிறகு இஷான் கிஷன் (82 ரன்), ஹர்திக் பாண்ட்யா (87 ரன்) ஆகியோரின் அரைசதத்தால் இந்தியா சரிவில் இருந்து மீண்டு 266 ரன்கள் சேர்த்தது. அடுத்து பாகிஸ்தான் பேட் செய்வதற்குள் மழை புகுந்து விளையாடியதால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதே சமயம் நேபாள அணி- பாகிஸ்தானுக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தில் வெறும் 104 ரன்னில் சுருண்டு 238 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் ஆரிப் ஷேக் (26 ரன்), சோம்பால் காமி (28 ரன்), குல்சன் ஜா (13 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.

எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். தோற்கும் அணி வெளியேறும்.

நேபாளம் குட்டி அணி என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டி அதிக அளவில் ரன் குவிக்க முயற்சிப்பார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பிய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் கணிசமான ரன் திரட்டுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இதே போல் இந்திய பவுலர்களும் போட்டுத்தாக்க ஆயத்தமாக உள்ளனர்.

அதே சமயம் இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனிப்பட்ட காரணத்துக்காக மும்பை திரும்பியுள்ளதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார். சூப்பர்4 சுற்று தொடங்குவதற்கு முன்பாக அணியுடன் இணைவார்.

நேபாளத்தை பொறுத்தமட்டில் முடிந்த வரை சவால் அளிக்க முயற்சிப்பார்கள். 40 ஓவருக்கு மேலாக தாக்குப்பிடித்து விளையாடினாலே அவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கும்.

இன்றைய ஆட்டத்தையும் மழை அச்சுறுத்துகிறது. பல்லகெலேயில் இன்று மழை பெய்வதற்கு 80 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பிற்பகலில் மழை பெய்து போக போக அதன் தாக்கம் குறையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே 'டாஸ்' போடுவதில் தாமதம் ஏற்படலாம்.

ஒரு வேளை வருணபகவான் வழிவிடாமல் ஆட்டம் ரத்தாகி இரு அணியும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொள்ளும் சூழல் உருவானால், ஏற்கனவே ஒரு புள்ளியை பெற்றுள்ள இந்தியா சூப்பர்4 சுற்றுக்குள் நுழையும்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ். முகமது ஷமி அல்லது பிரசித் கிருஷ்ணா.

நேபாளம்: குஷல் புர்டெல், ஆசிப் ஷேக், ரோகித் பாடெல் (கேப்டன்), ஆரிப் ஷேக், குஷல் மல்லா, திபேந்திர சிங், குல்சன் ஜா, சோம்பால் காமி, கரண் கே.சி., சந்தீப் லமிச்சன்னே, லலித் ராஜ்பன்ஷி.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

Similar News