இந்திய அணி பாகிஸ்தான் வராது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தது ஐசிசி
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெறுகிறது.
- பாகிஸ்தான் சென்று விளையாடமாட்டோம் என பிசிசிஐ தெரிவித்துள்ளதால் ஹைபிரிட் மாடல் தொடராக நடக்க வாய்ப்பு.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த வருடம் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் சென்று இந்தியா பங்கேற்குமா? என்பது குறித்து உறுதிப்படுத்தாமல் இருந்தது.
இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாடாது. மற்ற இடங்களில் அதாவது பாகிஸ்தானுக்கு வெளியே போட்டி நடத்தப்பட்டால் பங்கேற்கும் எனக் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்பதற்காக நாங்கள் பாகிஸ்தான் செல்லமாட்டோம் எனக் கூறியதாக ஐ.சி.சி. எங்களிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
ஐசிசி எங்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளது. அதில் எங்கள் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிட்டுள்ளது.
ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கான இந்த மெயிலை பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட தயக்கம் காட்டி வருவதால் ஹைபிரிட் மாடல் தொடராக இந்த தொடரை நடத்த வாய்ப்புள்ளதாக கருதப்பட்டு வந்தது.
ஆனால் பாகிஸ்தானால் ஹைபிரிட் மாடல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நக்வி தெரிவித்துள்ளார்.
இந்தியா கடந்த 2008-ம் ஆண்டுக்குப்பின் கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை. 2012-13-ல் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு இருநாடுகளுக்கு இடையில் ஒயிட்பால் தொடருக்காக இந்தியா வந்திருந்தது. அதன்பின் 2016 டி20 உலகக் கோப்பை, கடந்த வருடம் நடைபெறற் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்திருந்தது.