நியூசிலாந்துக்கு எதிரான ஒயிட்வாஷ் குறித்து முதன்முறையாக பதில் அளித்த அஸ்வின்
- நியூசிலாந்து தோல்வியை போல் வரலாற்றில் எப்போதும் இந்தியாவில் நடந்ததில்லை என்று நான் படித்தேன்.
- அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று உண்மையில் எனக்குத் தெரியவில்லை.
நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 0-3 என இழந்து முதன்முறையாக சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆனது. இதனால் இந்திய அணி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது.
இந்த நிலையில் முதன்முறையாக அஸ்வின் நியூசிலாந்து தொடர் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அஸ்வின் கூறியதாவது:-
நியூசிலாந்திடம் 3-0 என்ற கணக்கில் நாங்கள் தோல்வியடைந்தோம். இதுபோல வரலாற்றில் எப்போதும் இந்தியாவில் நடந்ததில்லை என்று நான் படித்தேன். அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று உண்மையில் எனக்குத் தெரியவில்லை. இரண்டு மூன்று நாட்கள் என்ன செய்வதென்று கூட எனக்கு புரியவில்லை. எனது தொழில் மற்றும் கிரிக்கெட் வாழ்க்கை அனுபவத்தில் இது ஒரு சிதறடிக்கும் அனுபவமாக இருந்தது.
நான் இந்த தோல்விக்கு மற்றவர்களை குறைகூறும் நபர் அல்ல. முதலில் நான் என்னிடமே அதிகமாக எதிர்ப்பார்க்கிறேன். பந்துவீச்சை விட கடைநிலை பேட்டிங்கில் என்னால் ரன்கள் அடிக்க முடியவில்லை என்பதுதான் பெரிய வேதனையாக இருந்தது.
கடைசியாக ரன்கள் அடிப்பது எப்போதும் அணிக்கு தேவையானதாக இருந்தது. பல நல்ல தொடக்கம் கிடைத்தும் நான் என்னுடைய விக்கெட்டை தவறான நேரத்தில் இழந்தேன். கடைசி டெஸ்ட் போட்டியில் கூட வெற்றிக்கு குறைவான ரன்கள் இருந்தபோது தவறாக விக்கெட்டை இழந்தேன். இந்த பெரிய தோல்விக்கு நானும் ஒரு காரணம்.
வீரர்களான எங்களுக்கு எந்தவிதமான வேதனையும் இல்லை, பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலர் விமர்சங்களை வைத்தனர். எனக்கு புரிகிறது. இந்திய ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரிய வேதனையில் இருக்கிறார்கள். ஆனால் உங்கள் எல்லோரையும் விட அணியின் வீரர்கள் அனைவருக்கும் அதிகப்படியான வலியும், வேதனையும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.