23 ஆண்டுக்கு பிறகு இலங்கையில் ஓய்வு நாளுடன் டெஸ்ட் போட்டி: காரணம் இதுதான்
- நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது.
கொழும்பு:
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.
அதன்படி, நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக ஓய்வு நாள் ஒன்று உண்டு. இதனால் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் நடைபெற்று வந்தது.
சமீபத்தில் 2008-ம் ஆண்டு டாக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 நாட்கள் விளையாடியது. அவர்கள் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் அந்த குறிப்பிட்ட நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது.
23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் இதுபோன்ற அரிய நிகழ்வு நடைபெற உள்ளது.
இலங்கை அணி கடந்த 2001-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 6 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடியது.
இந்நிலையில், நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் செப்டம்பர் 18 முதல் 23-ம் தேதி வரை என 6 நாட்கள் நடக்கிறது.
செப்டம்பர் 21-ம் தேதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடப்பதால் அந்த நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் செப்டம்பர் 26-30 வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.