செய்திகள் (Tamil News)

மோடி ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை- கனிமொழி எம்.பி.

Published On 2018-06-27 08:02 GMT   |   Update On 2018-06-27 08:07 GMT
இந்தியாவில் மோடி ஆட்சியால் பெண்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே பாதுகாப்பு இல்லை என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். #DMK #Kanimozhi
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி பெண்ணின் பெயரால் நடப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எந்த அளவு மோசமான ஆட்சி நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்று செய்தி வெளியாகி உள்ளது. இந்த நாட்டில் பெண்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் மக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தங்களுக்கு தேவையான திட்டங்களை மட்டுமே கொண்டு வருகிறார்கள்.

8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டுகிறார்கள். மக்களுடைய கருத்தை கேட்கவில்லை. இதற்கான பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், கேள்வி கேட்பவர்களை கைது செய்கிறார்கள்.

மதுரவாயல்- துறைமுகம் விரைவு சாலை திட்டம் வளர்ச்சி திட்டம் இல்லையா? அதை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு இருப்பது ஏன்? முக்கியமான இந்த திட்டத்தை நிறைவேற்ற அவசரம் காட்டவில்லையே. இது மிகவும் முக்கியமான வளர்ச்சி திட்டம் என்பது தெரியாதா?

சட்டசபையில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாங்களும் திராவிட கட்சிதான். மதசார்பின்மை இல்லாதவர்கள் என்று கூறி இருக்கிறார். இது நல்ல நகைச்சுவை.

தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் இருப்பதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா சொல்லி வருகிறது. பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.-ம்தான் தீவிரவாதம் கொண்டவை. அதை தடுக்க வேண்டும்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இரும்பு தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றக் கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.யான சி.எம்.ரமேஷ் கடந்த 21-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவரது போராட்டம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.

இந்த நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கடப்பாவுக்கு சென்று உண்ணாவிரதம் இருக்கும் தெலுங்கு தேசம் எம்.பி. ரமேசை சந்தித்து பேசி ஆதரவு தெரிவித்தார்.

இறையாண்மையை பாதுகாக்கவும், முறையான நிதி பெறவும் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு போராட வேண்டிய நேரம் இது.

இன்றைக்கு இந்த நாடு, மாநில உரிமை பற்றியும், பா.ஜனதா ஆட்சி இல்லாத மாநில மக்களை பற்றியும் அக்கறை கொள்ளாத அரசால் ஆட்சி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டே இருக்கிறார். அவர் பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதில்லை. மக்களின் பிரச்சினையில் கவனம் செலுத்துவதில்லை என்றார். #DMK #Kanimozhi
Tags:    

Similar News