செய்திகள் (Tamil News)

திருச்சி அருகே பஸ்சில் கடத்தி வரப்பட்ட 17¾ கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2018-07-12 18:44 GMT   |   Update On 2018-07-12 18:44 GMT
திருச்சி அருகே பஸ்சில் கடத்தி வரப்பட்ட 17¾ கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி:

மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் தனியார் சொகுசு பஸ்சில் தங்க கட்டிகள் கடத்தி செல்லப்படுவதாக கோவை மண்டல சுங்க இலாகா வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகில் உள்ள பூதக்குடி சுங்க சாவடியில் வாகன தணிக்கை செய்தனர். குறிப்பிட்ட தனியார் பஸ் வந்ததும் அதனை ஓரமாக நிறுத்த செய்து பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பஸ்சில் இருந்த புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த ரகமதுல்லா மகன் காஜா மொய்தீன் (வயது44), புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் சத்திரம் தெருவை சேர்ந்த அகமது கனி மகன் ஷாஜகான் (42) ஆகியோர் வைத்திருந்த 4 பைகளை சோதனை போட்டனர். அந்த பைகளில் ஏராளமான தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. மேலும் அவர்கள் இருவரும் தங்களது இடுப்பு பகுதியில் சுற்றி வைத்திருந்த துணியால் ஆன பெல்ட்டிலும் தங்க கட்டிகளை மறைத்து வைத்து இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து மொத்தம் 77 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 17 கிலோ 830 கிராம் 300 மில்லி எடையுள்ள இந்த தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 49 லட்சத்து 17 ஆயிரத்து 324 ஆகும். இதனை தொடர்ந்து காஜா மொய்தீனையும், ஷாஜகானையும் கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த தங்க கட்டிகளுடன் திருச்சி சுங்க இலாகா ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். கைதான 2 பேரும் நேற்று திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் பி. கவுதமன் அவர்கள் இருவரையும் வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
Tags:    

Similar News