செய்திகள்

டாக்டர் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்த பெண்ணிற்கு பிறந்த குழந்தை பலி

Published On 2018-08-17 07:11 GMT   |   Update On 2018-08-17 07:11 GMT
ஒரத்தநாடு அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கருப்பட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30) விவசாயி. இவரது மனைவி கனிமொழி (24). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் கனிமொழி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று மாலை இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள வடக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அப்போது அங்கிருந்த செவிலியர்கள் டாக்டர் தற்போது பணியில் இல்லை. எனவே நாங்கள் தான் பிரசவம் பார்க்க வேண்டும் என்று கூறி கனிமொழிக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

இதில் கனிமொழிக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை இறந்து விட்டது. இதனால் செவிலியர்கள் மற்றும் கனிமொழி உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இன்று காலை இறந்த குழந்தையின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். தகவலறிந்த ஒரத்தநாடு போலீசார் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பிரகாஷ் மற்றும் அவர்களது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் அவசர கால சிகிச்சைக்கு வடக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தால் இங்கு டாக்டர் பணியில் இருப்பதில்லை. நேற்று இரவு பிரசவ வலியால் துடித்த எனது மனைவியை இங்கு அழைத்துவந்தபோதும் டாக்டர் இல்லை.

அப்போது பணியில் இருந்த 2 செவிலியர்கள் எனது மனைவிக்கு பிரசவம் பார்த்தனர். ஆனால் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டது. இதற்கு காரணம் இங்கு டாக்டர் பணியில் இல்லாததே என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு கொண்டு சென்ற பெண்ணிற்கு பிறந்த குழந்தை இறந்ததால் ஓரத்தநாடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News