செய்திகள்

பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் கட்டாயம்- ஹெல்மெட் அணியாமல் சென்ற 2 ஆயிரம் பேருக்கு அபராதம்

Published On 2018-08-25 10:57 GMT   |   Update On 2018-08-25 10:57 GMT
கோவை மாநகரில் கடந்த 2 நாட்களில் மட்டும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 2 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Helmet #Tamilnadu
கோவை:

இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதலே கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதி என மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.

கோவை மாநகரில் கடந்த 2 நாட்களில் மட்டும் 1400 பேருக்கு ஹெல்மெட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 760 பேர் ஆவர். பின்னால் அமர்ந்திருந்தவர்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் 640 பேர் ஆவர்.

மாவட்டத்தின் புறநகர் பகுதியில் கடந்த 2 நாட்களில் மட்டும் 600 பேருக்கு ஹெல்மெட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 280 பேர் ஆவர். பின்னால் அமர்ந்திருந்தவர்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் 320 பேர் ஆவர். மொத்தத்தில் 2 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை முழுவதும் 3-வது நாளாக இன்றும் தீவிர வாகன சோதனை நடந்தது. மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் கோவை அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் சூலூர், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், வால்பாறை என மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

இதேபோல காரில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காரை ஓட்டுபவரும், டிரைவர் இருக்கை அருகே முன்னால் இருப்பவரும், பின்னால் இருப்பவர்களும் அணிந்திருக்கிறார்களா? என சோதனை நடத்தி வருகின்றனர்.

காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். #Helmet #Tamilnadu
Tags:    

Similar News