செய்திகள் (Tamil News)

கோவை, திருப்பூரில் பன்றி, டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலி

Published On 2018-11-03 05:37 GMT   |   Update On 2018-11-03 05:37 GMT
கோவை, திருப்பூரில் பன்றி, டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

கோவை:

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 வாரத்தில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மேலும் காய்ச்சல் அதிகமுள்ள பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் நேரடியாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையாக சிகிச்சையை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல், சளி, மூச்சு திணறல் பாதிப்புடன் ஏராளமானோர் தினசரி சிகிச்சைக்கு வருகின்றனர்.

இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் டாக்டர்கள் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டாக்டர்கள் காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்து பாதிப்பு இருந்தால் அவர்களை சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்கை அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் திருப்பூர் தாசப்ப நகரை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி வசந்தா (வயது 63) என்பவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

அங்கு டாக்டர்கள் வசந்தாவின் ரத்தமாதிரியை சோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 31-ந் தேதி அனுப்பி வைத்தனர். வசந்தாவை டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு வசந்தா பரிதாபமாக இறந்தார்.

திருப்பூர் மங்கலம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (57). கேபிள் ஆப்ரேட்டர். இவர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல், சளி மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் கணேசனின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கணேசன் பரிதாபமாக இறந்தார்.

கோவை வெரைட்டிஹால் ரோட்டை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் அமுதன் (5) என்பவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அமுதனின் ரத்தத்தை டாக்டர்கள் சோதனை செய்த போது அமுதனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அமுதன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுமித்ரா (35). இவர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை உறவினர்கள் கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு சுமித்ரா பரிதாபமாக இறந்தார்.

தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 11 பேரும், டெங்கு காய்ச்சலக்கு 4 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 58 பேர் என மொத்தம் 73 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Swineflu #Dengue

Tags:    

Similar News