செய்திகள்

புயல் தாக்கி 13 நாட்களாகியும் மின்சாரம், குடிநீர் வழங்காததால் பெண்கள் சாலை மறியல்

Published On 2018-11-30 05:07 GMT   |   Update On 2018-11-30 05:07 GMT
புயல் தாக்கி 13 நாட்களாகியும் மின்சாரம், குடிநீர் வழங்காததால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Gajastorm

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம், மருங்குளம் அருகே உள்ள கோபால் நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 16-ந் தேதி கஜா புயல் தாக்கியதில் மருங்குளம் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அனைத்தும் முற்றிலும் சாய்ந்தது.

இதனால் புயல் தாக்கி 13 நாட்கள் மேல் ஆகியும் இந்த பகுதியில் இன்னும் மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் குடிப்பதற்கு குடிதண்ணீர் இல்லை. நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 6 மணிக்கு மருங்குளம் அருகே உள்ள கறம்பக்குடி சாலையில் 200-க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகள் மற்றும் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்தும் சீர்செய்யபடும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து கோபால் நகரை சேர்ந்த சேகர் என்பவர் கூறியதாவது:-

கஜா புயல் தாக்கி 13 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரைக்கும் எந்தவொரு அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் எங்களை பார்த்தது கிடையாது.

மேலும் சாலைகளில் விழுந்த மரங்கள் அனைத்தும் அகற்றாமல் அப்படியே உள்ளது. மின்சாரம் இன்னும் வழங்கப்பட வில்லை. அன்றாடம் தேவைக்கு தண்ணீர் இல்லை. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் அவதிப்பட்டு வருகிறோம்.

எனவே அரசு உரிய நிவாரண பொருட்கள் மற்றும் குடிதண்ணீர், மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm

Tags:    

Similar News