செய்திகள் (Tamil News)

மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு கொளுந்தியாளை திருமணம் செய்த வாலிபர் வெட்டிக்கொலை

Published On 2019-01-07 10:44 GMT   |   Update On 2019-01-07 10:44 GMT
நெல்லையில் மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு கொளுந்தியாளை திருமணம் செய்த வாலிபரை மைத்துனர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி பெருமாள் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது35). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் மேலப்பாளையம் அமுதாபீட் நகரை சேர்ந்த மாரிசெல்வி (29) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் மாரிசெல்வி கருத்து வேறுபாடு காரணமாக முத்துவை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து மாரி செல்வியின் தங்கை ரேவதியுடன் முத்துவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி ரேவதியை தனிமையில் சந்தித்து பேசி வந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொளுந்தியாள் ரேவதியை முத்து திருமணம் செய்தார். தற்பாது அவர்கள் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே மேலப்பாளையம் சாலையில் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக முத்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அப்போது எதிரே முதல் மனைவி மாரிசெல்வி, 2-வது மனைவி ரேவதியின் தம்பியாகிய வள்ளி மணிகண்டன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை பார்த்ததும் முத்து மோட்டார் சைக்கிளை திருப்பினார். ஆனால் வள்ளி மணிகண்டன் அரிவாளுடன் முத்துவை துரத்தி வந்தார்.

அவரிடம் இருந்து தப்பிக்க முத்து தனது மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடினார். ஆனால் வள்ளி மணிகண்டன் விடாமல் துரத்தி சென்று முத்துவை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் முத்துவின் தலை, கழுத்து, கைகளில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த முத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

இதையடுத்து வள்ளி மணிகண்டன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சுகுணாசிங், உதவி கமி‌ஷனர் சக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் தில்லை நாகராஜன், காளியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முத்துவை சரமாரி வெட்டிக்கொலை செய்த வள்ளி மணிகண்டனை பிடிக்க போலீசார் விரைந்தனர். அப்போது நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு தப்ப முயன்ற வள்ளி மணிகண்டனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து வள்ளி மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags:    

Similar News