செய்திகள் (Tamil News)
முருகன்

அறையை சோதனையிட எதிர்ப்பு தெரிவித்து முருகன் வாக்குவாதம்

Published On 2020-12-11 02:36 GMT   |   Update On 2020-12-11 02:36 GMT
வேலூர் மத்திய ஜெயில் காவலர்கள் முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையை சோதனையிட முயன்றனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை பெண்கள் ஜெயிலில் வைத்து நளினி-முருகன் நேரில் சந்தித்து பேசி வந்தனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தற்போது இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசி வருகிறார்கள். முருகன் தனது உறவினர்களிடம் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும். அல்லது விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் 23-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

சிறைத்துறை சார்பில் வழங்கப்படும் உணவை அவர் உட்கொள்வதில்லை. தண்ணீர் மற்றும் உலர்பழங்கள் மட்டும் சாப்பிட்டு வருகிறார். அவரின் உடல்நிலையை ஜெயில் டாக்டர்கள் தினமும் காலை, மாலை வேளையில் கண்காணித்து வருகிறார்கள். ஜெயில் அதிகாரிகள் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தியும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டார். முருகனின் நடவடிக்கையை காவலர்கள் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகனுடன் அறையில் தங்கியிருந்த ஆயுள்தண்டனை கைதி பொட்டலம் ஒன்றை குப்பை தொட்டியில் போட்டுள்ளார். அதைக்கண்ட ஜெயில் காவலர்கள் உடனடியாக அறையை திறந்து குப்பை தொட்டியில் கிடந்த பொட்டலத்தை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில், விபூதி இருந்துள்ளது. ஆனாலும் ஆயுள்தண்டனை கைதி மீது ஜெயில் காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த அறையை அவர்கள் சோதனையிட முயன்றனர். அதற்கு முருகன் எதிர்ப்பு தெரிவித்து ஜெயில் காவலர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் அவர் அறையில் இருந்த துடைப்பம், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை காவலர்கள் மீது வீசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெயில் வார்டன் மோகன்குமார் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதில், அறையை சோதனையிட முயன்ற ஜெயில் காவலர்களை பணி செய்ய விடாமல் முருகன் தடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 3-ந் தேதி முருகன் சிறை விதியை மீறி வாட்ஸ்-அப் வீடியோ காலில் வெளிநாட்டில் உள்ள உறவினருடன் பேச முயன்றதை தடுத்த காவலருடன் வாக்குவாதம் செய்தார். அதனால் அவர் மீது காவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது முருகன் மீது அறையை சோதனையிட முயன்ற காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 18-வது நாளாக நேற்று முருகன் உண்ணாவிரதம் இருந்தார். அவரை தனி அறையில் அடைக்க முடிவு செய்துள்ளதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News