தமிழ்நாடு (Tamil Nadu)

சிதம்பரத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

Published On 2024-04-06 04:35 GMT   |   Update On 2024-04-06 04:35 GMT
  • மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
  • இரவு பிரசாரத்தை முடிக்கும் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் கடலூர் வழியாக புதுச்சேரி சென்றடைகிறார்.

கடலூர்:

பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

அதன்படி நேற்று கடலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் அருகே வி.சாலையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து பிரசார பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு, அங்கிருந்து கார் மூலம் கடலூர் வந்தடைந்தார். அவருக்கு மாவட்டசெயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு அவர் இரவு கடலூரில் தங்கி ஓய்வு எடுத்தார். 

சிதம்பரத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பேசும் பொதுக்கூட்ட மேடை.

இன்று மாலை 6 மணிக்கு மேல் சிதம்பரம் அருகே லால்புரத்தில், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். இரவு பிரசாரத்தை முடிக்கும் அவர், அங்கிருந்து கார் மூலம் கடலூர் வழியாக புதுச்சேரி சென்றடைகிறார்.

அங்கு அவர் அக்கார்டு ஓட்டலில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர், சிதம்பரம் வருகையையொட்டி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News