தமிழ்நாடு (Tamil Nadu)

தஞ்சையில் கோலாகலம்: ஒரே இடத்தில் 25 பெருமாள்கள் கருடசேவை வைபவம்

Published On 2024-05-29 10:28 GMT   |   Update On 2024-05-29 10:28 GMT
  • வெண்ணாற்றங்கரை நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.
  • நாளை மறுநாள் வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் காலை 9 மணியளவில் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் ஆண்டுதோறும் ஒரே இடத்தில் 25 பெருமாள்கள் எழுந்தருளி கருடசேவை வைபவம் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான கருடசேவை வைபவம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் நடைபெறும் 90-வது ஆண்டு கருடசேவை விழாவானது நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகியது. வெண்ணாற்றங்கரை நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில் திவ்யதேச பெருமாள்களுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு 7 மணி முதல் 12 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜவீதிகளில் பெருமாள்கள் வீதிஉலா நடைபெற்றது.

இதில் நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோவில்களில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்கள் எழுந்தருளி ஒரே நேரத்தில் வலம் வந்து ராஜவீதிகளை அழகூட்டியது. தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு 25 பெருமாள்களையும் ஒரு சேர கண்டு தரிசித்து பரவசம் அடைந்தனர்.

தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) காலை நவநீத சேவை நடைபெற உள்ளது. இதில் வெண்ணாற்றங்கரையில் காலை 6 மணியளவில் புறப்பட்டு காலை 7 மணி முதல் 10.30 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜவீதிகளில் வீதிஉலா நடைபெறும். இதில் 16 கோவில்களில் இருந்து பெருமாள் எழுந்தருளி ராஜவீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்க உள்ளனர்.

தொடர்ந்து, நாளை மறுநாள் (31-ந்தேதி) வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் காலை 9 மணியளவில் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. இதனிடையே ராஜராஜ சமய சங்கத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு திருவாய்மொழி தொடங்கி, நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு சாற்று முறை நடைபெற உள்ளது. 25 கோவில்களில் இருந்து பெருமாள்கள் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்ததால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

Tags:    

Similar News