தமிழ்நாடு (Tamil Nadu)

அரசு பேருந்து- கார் நேருக்கு நேர் மோதி விபத்து: குழந்தை உள்பட இருவர் உயிரிழப்பு

Published On 2024-08-09 06:11 GMT   |   Update On 2024-08-09 06:12 GMT
  • கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பாலத்தில் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
  • காருக்குள் இருந்த சவுந்தர்ராஜ், குழந்தை ஷிவானிகா ஆகிய இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள காடனேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் என்ற சென்றாயபெருமாள் (வயது 35). இவரது மனைவி பிரியங்கா (30). இந்த தம்பதிக்கு ஷிவானிகா என்ற இரண்டு வயது மகள் இருந்தார்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக செந்தில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வேலைக்கு செல்லமுடியாமல் தவித்தார். இதையடுத்து சிகிச்சை பெறுவதற்காக தனது மனைவியின் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு கடந்த மாதம் செந்தில் குடும்பத்துடன் சென்றார்.

பின்னர் அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற அவர் குணமடைந்தார். இதையடுத்து மீண்டும் தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்த செந் தில் நேற்று திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டார். அவரை ஊரில் விட்டு வருவதற்காக உறவினர் சிலரும் முடிவு செய்தனர்.

அதன்படி வாடகைக்கு ஒரு காரை எடுத்துக்கொண்டனர். அதில் செந்தில், அவரது மனைவி பிரியங்கா, குழந்தை ஷிவானிகா, பிரியங்காவின் சித்தப்பா சவுந்தர்ராஜன் (50), உறவினர்கள் லல்லியம்மாள் (52), சுரேஷ் (35), சாந்தா ஆகியோரும் வந்தனர். காரை திருப்பத்தூரை சேர்ந்த டிரைவர் அப்பீஸ் (29) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று இரவு திருப்பத்தூரில் இருந்து புறப்பட்ட அவர்கள் இன்று அதிகாலை திருமங்கலம் அருகேயுள்ள டி.புதுப்பட்டி பாலத்தில் இறங்கி கொண்டிருந்தனர். அப்போது எதிரே முத்து லிங்காபுரத்தில் இருந்து கல்லுப்பட்டி வழியாக திருமங்கலம் நோக்கி செல்லும் அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பாலத்தில் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கியதோடு, அனைத்து கதவுகளும் திறக்க முடியாமல் லாக் ஆகிக்கொண்டது. இதனை பார்த்ததும் பேருந்தில் வந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்க போராடினர்.

ஆனால் முயற்சி பலன் அளிக்காததால் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்த கல்லுப்பட்டி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காரை வெளியே எடுத்து அதன் கதவுகளை உடைத்தனர். ஆனால் இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த சவுந்தர்ராஜ், குழந்தை ஷிவானிகா ஆகிய இருவரும் இடிபாடுகளுள் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள்.

செந்தில், பிரியங்கா, லல்லியம்மாள், சுரேஷ், சாந்தா, டிரைவர் அப்பீஸ் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்தரிக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டவர், சிகிச்சை முடிந்து ஊர் திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியானது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News