மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை: 10 பேர் கொண்ட கும்பல் கைவரிசை
- பள்ளிப்பேட்டை ஊராட்சியில் உள்ள மருவூர் அவென்யூ குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
- நள்ளிரவில் சுமார் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அச்சரப்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் மின்சார வாரியத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஹரிகரன். இவர் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பேட்டை ஊராட்சியில் உள்ள மருவூர் அவென்யூ குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவில் சுமார் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
சத்தம் கேட்டு எழுந்த ஹரிகரன், அவரது மனைவி ஜெயா மற்றும் மகள் உள்பட அனைவரையும் கத்தியை காட்டி மிரட்டி கை, கால் கட்டி போட்டனர். பிறகு மர்ம கும்பல் வீட்டிலிருந்த 8 பவுன் தங்கநகைகள், 1¼ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.84 ஆயிரம் உள்ளிட்ட அனைத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேர் கொண்ட கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கரும்பூர் வி.ஜி.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (54), விவசாயியான இவர், வீட்டில் புகுந்த மர்மநபர்கள் 12 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் ஊராட்சியில் வசித்து வரும் கிருஷ்ணவேணி (60), வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகையும், ரூ.10ஆயிரத்தை திருடி சென்றது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.