தமிழ்நாடு (Tamil Nadu)

நீங்கள் பாதை அமைத்தீர்கள்... நாங்கள் பயணத்தை தொடர்கிறோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-06-03 03:31 GMT   |   Update On 2024-06-03 03:31 GMT
  • முத்தமிழ் அறிஞர் கலைஞரால் போற்றப்பட்ட பேரறிஞர் பெருந்தகைக்கு முதல் வணக்கம்.
  • உங்கள் பெயரை காக்கவே எந்நாளும் உழைக்கிறோம்.

சென்னை:

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கலைஞர் கருணாநிதி அண்ணாவிற்கு எழுதிய கவிதையை வாசித்து அதன் பின்னணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடத்தில் வணங்குவதுபோலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தலைவர் என்பார்

தத்துவ மேதை என்பார்

நடிகர் என்பார்

நாடக வேந்தர் என்பார்

சொல்லாற்ற சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்

மனிதர் என்பார்

மாணிக்கம் என்பார்

மாநிலத்து அமைச்சர் என்பார்

அன்னை என்பார்

அருமொழி காவலர் என்பார்

அரசியல்வாதி என்பார்

அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர்

நெஞ்சத்து அன்பாலே அண்ணா என்று ஒரு சொல்லால் அழைக்கட்டும் என்றே அவர் அன்னை பெயரும் தந்தார்

என்று முத்தமிழ் அறிஞர் கலைஞரால் போற்றப்பட்ட பேரறிஞர் பெருந்தகைக்கு முதல் வணக்கம்.

தலைவர்களுக்கெல்லாம் தலைவர்

முதல்வருக்கெல்லாம் முதல்வர்

கலைஞர்களுக்கெல்லாம் கலைஞர்

நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி

இந்த பூமிப்பந்தில் வாழும் தமிழருக்கெல்லாம் குடும்பத்தலைவர்

இந்திய நாடே அண்ணாந்து பார்த்த அரசியல் ஞானி

முத்தமிழ் அறிஞர் தமிழனத்தலைவர் கலைஞர் அவர்கள் சூல் கொண்ட நாள் ஜூன் 3

அதிலும் 2024-ம் ஆண்டு என்பது இந்த நூற்றாண்டின் தலைவராம் கலைஞருக்கு நூற்றாண்டு.

எல்லா ஆண்டும் கலைஞர் ஆண்டே.

அவர் ஆண்ட ஆண்டும் வாழ்ந்த ஆண்டும் மட்டுமல்ல எல்லா ஆண்டும் கலைஞர் ஆண்டே

வீழ்ந்து கிடந்த தமிழ் சமுதாயத்திற்கு விடிவெள்ளியால் தோன்றி

வாழும் காலத்தில் ஒளி தரும் உதயசூரியனாய் வாழ்ந்து

மறைந்த பிறகும் கலங்கரை விளக்கமாய் வழிகாட்டிக்கொண்டிருப்பவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள்.

 

தலைவர் அவர்களே நீங்கள் நினைத்தீர்கள் நாங்கள் செய்துகாட்டி வருகிறோம்

நீங்கள் பாதை அமைத்தீர்கள் நாங்கள் பயணத்தை தொடர்கிறோம்.

நீங்கள் இயக்குகிறீர்கள் நாங்கள் நடக்கிறோம்

உங்கள் பெயரை காக்கவே எந்நாளும் உழைக்கிறோம்

உழைப்போம்... உழைப்போம்... உழைப்போம்...

என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News