தமிழ்நாடு

101 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம்

Published On 2024-07-27 11:04 GMT   |   Update On 2024-07-27 11:04 GMT
  • தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.
  • அணையின் நீர் இருப்பு 67.06 டி.எம்.சியாக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகள் நிரம்பியது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்து வருகிறது.

கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 506 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.70 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 1,18,296 கன அடியாக உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகாரிப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 67.06 டி.எம்.சியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அணை நிரம்பி வரும் நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா என்று எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

Similar News