தமிழ்நாடு (Tamil Nadu)

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்- முதலமைச்சர் அறிவுறுத்தல்

Published On 2024-07-20 09:12 GMT   |   Update On 2024-07-20 09:12 GMT
  • ஆலோசனை கூட்டத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.
  • மழை நிலவரத்துக்கு ஏற்ப உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சென்னை:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் பலத்த மழை காரணமாக அதிக அளவில் வெள்ளம் தேங்கி நிற்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதிகளுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோல் கனமழை பெய்துவரும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் கனமழை பெய்துவரும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை சேர்ந்த மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை உடனடியாக துரிதப்படுத்த வேண்டும், நிவாரண மையங்களை

அமைத்து மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அங்கு பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

ஏற்கெனவே பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக மீட்பு குழுவினர் தேவைப்பட்டாலும் உடனடியாக அனுப்பி வைக்க அரசு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களிடமும், அந்தந்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மீட்பு பணிகள் தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்ததுடன் மீட்பு பணிகள் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும் மழை நிலவரத்துக்கு ஏற்ப உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான தகவல்களை தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News