தமிழ்நாடு (Tamil Nadu)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் யானையிடம் ஆசி வாங்கிய காட்சி.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் இன்று சாமி தரிசனம்

Published On 2024-02-15 05:33 GMT   |   Update On 2024-02-15 05:33 GMT
  • தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்து காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கார் மூலம் வந்தார்.
  • ஆண்டாள் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

பாராளுமன்ற தேர்தலுக்கு தேசியக்கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல் மாநிலக்கட்சிகளும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை மும்முரமாக நடத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 4 முனை போட்டி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக அவர் நேற்று இரவு ராஜபாளையம் சென்று அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்து காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கார் மூலம் வந்தார். அங்கு அவருக்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டு நின்று வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து அவர் ஆண்டாள் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் கார் மூலம் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு அடிவார பகுதியில் உள்ள அவரது குலதெய்வமான வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுமார் இரண்டு மணி நேரம் இருந்து சிறப்பு வழிபாடு செய்தார். மேலும் அவரது குடும்பத்தின் சார்பில் வனப்பேச்சிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

அரசியலில் எந்த ஒரு முடிவு எடுப்பது என்றாலும் ஓ.பன்னீர்செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள செண்பகத்தோப்பில் அமைந்திருக்கும் தனது குல தெய்வமான வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு சென்று அனுமதி வாங்கிவிட்டு தான் முடிவு செய்வார். இந்த திடீர் வருகை குறித்து அவரது கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ஓ.பி.எஸ். சாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்துள்ளார். இதில் எந்த அரசியலும் கிடையாது என்று திட்டவட்டமாக கூறினர்.

Tags:    

Similar News