தமிழ்நாடு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு விநாடிக்கு 6972 கன அடியாக அதிகரிப்பு

Published On 2024-07-11 05:07 GMT   |   Update On 2024-07-11 05:07 GMT
  • கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும்.
  • குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று அணைக்கு வினாடிக்கு 6,141 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 104.30 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,972 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அதுபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை அணையின் நீர்மட்டம் 82.68 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 5,118 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இந்த 2 அணையில் இருந்தும் மொத்தம் விநாடிக்கு 6,972 கன அடி வீதம் நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 3,341 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4,521 கன அடியாக அதிகரித்தது.

தொடர்ந்து இன்று காலையில் நீர்வரத்து சற்று குறைந்து விநாடிக்கு 4,197 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நேற்று 41.15 அடியாக நீடித்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 41.65 அடியாக உயர்ந்தது. அணையில் 12.95 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News