தமிழ்நாடு (Tamil Nadu)

முழு மதுவிலக்கை அமல்படுத்துவதே விஷ சாராய கொடுமைகளை தடுக்கும் தீர்வு - திருமாவளவன்

Published On 2024-06-20 16:04 GMT   |   Update On 2024-06-20 16:04 GMT
  • மெத்தனால் விநியோகத்தைக் கண்காணிப்பதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • முழு மதுவிலக்கு என்பதில் திமுகவுக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளனர். முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே இக்கொடுமையைத் தடுக்கும் நிரந்தரத் தீர்வு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டுமென வலியுறுத்தி சென்னையில் 24-06-2024 அன்று மாலை 3.00 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

கள்ளக்குறிச்சியில் 'மெத்தனால்' என்னும் அடர் ஆல்கஹால் கலந்த சாராயம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை குடித்த அப்பகுதிகளைச் சார்ந்த 140- க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த பேரவலம் நாட்டைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் குரூரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் இந்தக் கொடுமையைத் தடுக்கும் நிரந்தர தீர்வு என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

மெத்தனால் என்னும் நஞ்சு கலந்த கள்ளச்சாராயம் கூடுதல் போதை அளிப்பதாகச் சொல்லி, சட்டத்துக்கு விரோதமாக ஒரு கும்பல் இந்த வணிகத்தில் ஈடுபட்டுவருகிறது.

மீளமுடியாத போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் தாம் அந்த வகையான கள்ளமதுவுக்கு வாடிக்கையாளர்களாக மாறி வருகின்றனர்.

இத்தகைய கள்ளவணிகம் கள்ளக்குறிச்சிப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. அதன்விளைவாக தற்போது 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் மெத்தனால் கலந்த நச்சு சாராயத்தைக் குடித்து 22 பேர் உயிரிழந்தனர் என்பதை நாடறியும். அந்த நேரத்தில் 'மெத்தனாலின் கள்ள வணிக நடமாட்டத்தைக் கண்காணிப்போம்; இந்த கள்ளச்சந்தையில் ஈடுபட்டுவரும் மஃபியா கும்பலின் சட்டவிரோத கட்டுப்படுத்துவோம்' என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், கள்ளச் சந்தையில் மெத்தனால் கட்டற்றமுறையில் புழக்கத்திலிருப்பது உறுதியாகியுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

அவ்வாறு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டிருந்தால்

இந்த உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாமே என்னும் கவலை மேலோங்குகிறது.

எனவே, இனியாவது மெத்தனால் விநியோகத்தைக் கண்காணிப்பதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உயிரிழந்த ஒவ்வொருவரது குடும்பத்துக்கும் தலா 10 இலட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சற்று ஆறுதலை அளிக்கிறது. இந்நடவடிக்கைகளை வரவேற்கிற அதேவேளையில், மெத்தனாலின் கள்ளவணிகத்தோடு தொடர்புடைய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்கள்மீது கடும்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவே அரசின் சார்பில் மதுக்கடைகள் நடத்தப்படுவதாக நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், அது ஏற்புடையவாதமாக இல்லை என்பதை இத்தகைய சாவுகள் உறுதிப்படுத்துகின்றன.

அரசின் மதுபானம் தாரளமாகப் புழக்கத்திலிருந்தும் கள்ளச்சாரய வணிகம் வெளிப்படையாக நடக்கிறது. சில பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்பாக ஊரறிய ஏலம் விடப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதிலிருந்து 'பாதுகாப்பான' அரசு சாராயத்தின் மூலம் கள்ளச்சாராய வணிகத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகிறது.

அரசின் ' டாஸ்மாக் ' மதுக்கடைகளில் தொடர்ந்து மது அருந்தி போதைப்பழக்கத்திற்கு ஆளாகி மீளமுடியாத அடிமைகளாக மாறியவர்கள்தாம், அரசின் மதுவிலுள்ள போதை பற்றாத நிலையில் இத்தகைய நச்சு கலந்த கள்ளச்சாராயத்தை நாடுகின்றனர். எனவே, அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள்தாம் மதுபோதை அடிமைகளை உருவாக்குகிறது என்பதுவும் அதன் காரணமாகவே கூடுதல் போதைக்கான கள்ளச்சாராயத்துக்கு வழி வகுக்கிறது என்பதுவும் நாம் உணரவேண்டிய உண்மைகளாக உள்ளன.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாமைக்கு மாநில அரசுக்கான வருவாய் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், குடி நோயாளிகளால் மாநிலத்துக்கு ஏற்படும் மனிதவள இழப்பு, அவர்களால் மாநில அரசுக்கு ஏற்படும் சுகாதார செலவினச் சுமை ஆகியவற்றைக் கணக்கிட்டால் மதுக்கடைகளின் மூலம் வரும் வருவாயை விட இந்த இழப்பு அதிகம் என்பதை உணரலாம். எனவே, மதுக்கடைகள் நடத்துவதற்கு வருவாய் ஒரு காரணமாக சொல்லப்படுவது ஏற்புடையதாக இல்லை.

இந்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

முழு மதுவிலக்கு என்பதில் திமுகவுக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக இதனை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கு மட்டுமல்ல; இந்திய ஒன்றிய அரசுக்கும் உள்ளது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் ( Directive Principles) அதுகுறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படியே, 1954 இல் இந்திய அரசின் திட்டக்குழுவின் சார்பில் "மதுவிலக்கு விசாரணைக் குழு" என ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 1955 செப்டம்பர் 10 ஆம் நாளன்று அறிக்கையை சமர்ப்பித்தது. அவ்வறிக்கையில் சில பரிந்துரைகளை முன்வைத்தது.

" *மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் தெளிவான ஒரு கால வரையறையை அறிவித்து அதிலிருந்து மதுவிலக்குக் கொள்கையைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்;

*ஒன்றிய அரசின் மதுவிலக்குத் திட்டங்களுக்கு முழுமையாக மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒன்றிய அரசானது மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதன் மூலமாக மதுவிலக்கை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்;

* 1958 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேசிய அளவில் இதற்கென சட்டம் ஒன்று இயற்றப்பட்டு அது அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். "

இவை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அந்த அறிக்கையில் உள்ளன. அந்தப் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்திருந்தால் மனிதவள இழப்புகளிலிருந்து இந்தியா மீண்டிருக்கும். எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கும்.

எனவே, இப்போதாவது அக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன், நச்சு சாராயம் குடித்து உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிப்பதை விடவும் முழுமையான மதுவிலக்கின் தேவை குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என்பதை மாநில அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News