தமிழ்நாடு (Tamil Nadu)

மழை - ஆரியங்காவு பாலருவி பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை காணலாம்.

சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்வு

Published On 2024-07-16 06:16 GMT   |   Update On 2024-07-16 06:16 GMT
  • மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
  • கடையம் ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. குறிப்பாக அணை பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று தொடங்கி இன்று காலை வரையிலும் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக இன்று காலை வரை 44 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை பகுதியில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. இதனால் ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 4 ½ அடி உயர்ந்து 110.80 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 129.20 அடியாகவும் உள்ளது.

இந்த அணைகளில் இருந்து பாசனத்திற்காக மாவட்டத்தின் 7 கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கால்வாய் நீர் மூலம் பாசனம் பெறும் விளைநிலங்களில் கார் பருவ நெல் சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த கால்வாய் வரத்து குளங்களுக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அந்த அணை பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சாரல் மழை பரவலாக பெய்தது. இன்று காலை முதல் வெயில் அடித்தது. கன்னடியன் பகுதியில் 6.4 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 5.6 மில்லிமீட்டரும், களக்காட்டில் 6.8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அம்பை, ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. நாங்குநேரியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரையிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக குண்டாறு அணையில் சுமார் 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணை நிரம்பி ஒரு மாதமாக தண்ணீர் வெளியேறி வரும் நிலையில் நேற்று கூடுதல் தண்ணீர் வெளியேறியது.

கடையம் ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. நேற்று ஒரே நாளில் அந்த அணையின் நீர் இருப்பு 4 ½ அடி உயர்ந்தது. 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை நிரம்புவதற்கு இன்னும் 2 அடி நீரே தேவைப்படுகிறது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 63 அடியை எட்டியுள்ளது.

அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 35 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. மேலும் விவசாய பணிகளும் தீவிரம் அடைந்து வருகிறது.

ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள தென்காசியில் 15 மில்லிமீட்டரும், சிவகிரியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. நகர் பகுதிகளை பொறுத்தவரை செங்கோட்டையில் 58.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் தமிழக -கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள ஆரியங்காவு பாலருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 

Tags:    

Similar News