தமிழ்நாடு (Tamil Nadu)

விவசாயிகளுக்கு முழு நிவாரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்

Published On 2024-05-28 01:58 GMT   |   Update On 2024-05-28 01:58 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார்.
  • அதில், மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றார்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் பல பகுதிகளில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடையும் முடிந்துவிட்டது. சில பகுதிகளில் நீண்டகால பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் தொடர் மழை காரணமாக நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி, முழுவதுமாக முளைத்துவிட்டது. இதனால் நெற்பயிர்களும், வைக்கோலும்கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வேளாண் பயிர்கள் மழை நீரில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. பணகுடிக்கு அருகிலுள்ள பெரிய புதுகுளம், புஞ்சை குட்டிகுளம் பாசனப் பகுதிகளில், விவசாயிகள் நெல்பயிர் சாகுபடி செய்த நெல்மணிகள் விளைந்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வந்த நிலையில், கடந்த 10 நாளாக பெய்த கனமழையால் நெல்மணிகள் முளைத்து, முற்றிலும் சேதமடைந்துள்ளது.

அதேபோல், ராதாபுரம் தாலுகா கும்பிகுளம், பெருங்குடி, திசையன்விளை தாலுகா, கோட்டை கருங்குளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நெல்மணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி, சேதமடைந்துள்ளது.

ஆகவே, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள நெல்மணிகளின் சேதத்தை ஆய்வுசெய்து, இதனை பேரிடராக கருதி அரசு உரிய அறிக்கை பெற்று பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக முழு நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News