தமிழ்நாடு (Tamil Nadu)

பிரதமர் மோடி பாதுகாப்பு பிரச்சினை- மத்திய மந்திரி அமித்ஷாவை அண்ணாமலை இன்று சந்திக்கிறார்

Published On 2022-12-01 05:25 GMT   |   Update On 2022-12-01 05:25 GMT
  • டெல்லியில் பிரசாரத்துக்கு சென்றுள்ள தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார்.
  • சந்திப்பின்போது மத்திய உளவுத்துறை பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருப்பதை எடுத்துக்கூறி இதுதொடர்பாக மத்திய குழு விசாரிக்க வலியுறுத்த போவதாக கூறப்படுகிறது.

சென்னை:

பிரதமர் மோடி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வந்தார்.

மோடி கூட்ட நிகழ்ச்சிக்கான பாதுகாப்பில் குளறுபடி இருந்ததாகவும், மெட்டல் டிடெக்டர் கருவிகள் செயல்படவில்லை என்றும் மத்திய பாதுகாப்புத் துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கவர்னரை சந்தித்து புகார் செய்தார்.

இதற்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது, அவரது பாதுகாப்பில் குளறுபடிகள் ஏதுமில்லை. பாதுகாப்பு சிறப்பான முறையில் செய்யப்பட்டு இருந்தது. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு குழுவினரும் அதுபற்றி குறை சொல்லவில்லை. பாதுகாப்பு சிறப்பாக இருந்ததாகவே அவர்கள் வாய்மொழியாக கூறிவிட்டு சென்றனர்.

மேலும் தமிழக காவல்துறையில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் நவீனமானவை. அவ்வப்போது பழைய உபகரணங்கள் மாற்றப்பட்டு, அப்போதுள்ள நவீன வசதிகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகிறது. பழைய பாதுகாப்பு உபகரணங்கள் வழக்கம் போல மாற்றப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. தரப்பிலும் அண்ணாமலையின் கருத்தை கடுமையாக விமர்சித்தனர். இது தொடர்பாக டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:-

பிரதமர் ஒரு இடத்துக்கு வந்தால் மத்திய அரசு தான் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும். டெல்லியில் இருந்து அதிகாரிகள் வந்துதான் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள். அவர்களை தாண்டி தமிழக போலீசார் எதுவும் செய்ய முடியாது என்றார்.

இதுதொடர்பாக பா.ஜனதா துணைத் தலைவர் சக்கரவர்த்தி கடும் கண்டனம் தெரிவித் ள்ளார். அவர் கூறியதாவது:-

பிரதமரின் பாதுகாப்பை மத்திய பாதுகாப்பு படை பார்த்து கொள்ளும் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களை கண்காணிப்பது, பரிசோதிப்பது எல்லாவற்றையும் மாநில அரசுதான் பார்த்து கொள்ளும்.

அதில்தான் தமிழக அரசு கோட்டை விட்டுள்ளது. செயல்படாத மெட்டல் டிடெக்டர் வழியாக எல்லோரும் கூட்ட அரங்குக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து இருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும்?

அதனால்தான் குறையை கண்டுபிடித்து எதிர்காலத்திலாவது திருத்தி கொள்ளத்தான் விசயத்தை சுட்டி காட்டுகிறோம். ஆனால் விஷயத்தை திசை திருப்ப காவல்துறையும், அரசும் முயற்சிக்கிறது என்றார்.

இந்த நிலையில் டெல்லியில் பிரசாரத்துக்கு சென்றுள்ள தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின்போது மத்திய உளவுத்துறை பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருப்பதை எடுத்துக்கூறி இதுதொடர்பாக மத்திய குழு விசாரிக்க வலியுறுத்த போவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News