தமிழ்நாடு

ஆதி திராவிடர் விடுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... எடப்பாடி பழனிசாமி

Published On 2024-09-08 08:27 GMT   |   Update On 2024-09-08 08:27 GMT
  • தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு மாதம் ஒருமுறை பள்ளி மாணவர் ஒருவருக்கு ரூ.100-ம், கல்லூரி மாணவர் ஒருவருக்கு ரூ.150-ம் வழங்கப்படுவதாகவும் தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது.
  • பலமுறை நிர்வாகத்திடம் புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2021 மே மாதம், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, நான் ஏற்கெனவே ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள ஏழை, எளிய ஆதி திராவிடர் மாணவர்கள் அடிப்படை வசதியின்றி சொல்லொண்ணா துயரம் அனுபவித்து வருகிறார்கள் என்பதையும், பல இடங்களில் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க. அரசு எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளேன்.

ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் உள்ள சுமார் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளில் சுமார் 82,500 பள்ளி மாணாக்கர்களும், சுமார் 16,500 கல்லூரி மாணாக்கர்களும் என்று சுமார் 99 ஆயிரம் மாணவ, மாணவியர் தங்கியுள்ளதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விதிகளின்படி, உணவுப்படி வழங்கப்படுவதாகவும், இது தவிர பண்டிகை காலங்களில் சிறப்பு உணவு வழங்க சிறப்பு நிதியும், சோப்பு, எண்ணெய் போன்ற தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு மாதம் ஒருமுறை பள்ளி மாணவர் ஒருவருக்கு ரூ.100-ம், கல்லூரி மாணவர் ஒருவருக்கு ரூ.150-ம் வழங்கப்படுவதாகவும் தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது.

மயிலாப்பூரில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் பல கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ளதாகவும், அங்குள்ள கழிவறைகள் சுகாதாரமின்றி, கதவுகள் உடைந்துள்ள நிலையில் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் வெளியாட்கள் வளாகத்தில் மதுபானங்கள் அருந்துவதாகவும், அசைவ உணவு வழங்கப்படும்போது 3-ல் 1 பங்கு மாணவர்களே சாப்பிடக்கூடிய அளவில் உணவு வழங்கப்படுவதால், பல மாணவர்கள் சாப்பாடு இல்லாமல் பசியோடு இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும், தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும், இது போன்ற பல குறைகள் குறித்து பலமுறை நிர்வாகத்திடம் புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உடனடியாக தமிழ்நாடு முழுவதும் சிறப்புக் குழு அமைத்து, ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் விடுதிகளை போர்க்கால அடிப்படையில் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை சீர் செய்ய தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News