தமிழ்நாடு (Tamil Nadu)

குடிபோதையில் நடுரோட்டில் பஸ்சை வழிமறித்து ரகளை செய்த பெண்ணை எச்சரித்து அனுப்பிய போலீசார்

Published On 2023-05-27 05:41 GMT   |   Update On 2023-05-27 05:41 GMT
  • ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் ஒரு பெண் சுடிதார் அணிந்து மொபட்டில் வந்தார்.
  • ஒரு ஆட்டோவில் அந்தப் பெண்ணை பொதுமக்கள், போலீசார் குண்டுக்கட்டாக ஏற்றி சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.

ஈரோடு:

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் ஒரு பெண் சுடிதார் அணிந்து மொபட்டில் வந்தார். பின்னர் அவர் காந்திஜி ரோட்டில் மொபட்டை நிறுத்தி விட்டு நடுரோட்டில் அமர்ந்து கொண்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

காந்திஜி ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரோடு என்பதால் அந்தப் பெண் நடுரோட்டில் அமர்ந்து கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

ஆனால் அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்லாமல் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பொது மக்களும் கூடி விட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பெண் தானாக அங்கிருந்து நடந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு பஸ் முன்பு அந்தப் பெண் ரகளையில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்களும், போலீசார் உடன் இணைந்து அங்கிருந்து அவரை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து செல்லாமல் புலம்பிக் கொண்டே இருந்தார்.

இதையடுத்து ஒரு ஆட்டோவில் அந்தப் பெண்ணை பொதுமக்கள், போலீசார் குண்டுக்கட்டாக ஏற்றி சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த அங்கலட்சுமி என்பதும் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

பின்னர் அவருக்கு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் போலீசார் இனி இவ்வாறு பொது இடங்களில் நடந்து கொள்ளக் கூடாது என அங்கலட்சுமியை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே பரபரப்பான சூழ்நிலை நிலவயது.

Tags:    

Similar News