நாளை முதல் தொண்டர்களை சந்திக்கும் சசிகலா
- சுந்தரபாண்டியபுரத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
- போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தென்காசி:
அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கவும், 2026-ல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க இருப்பதாக சசிகலா தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக 'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' என்ற தலைப்பில் நாளை (புதன்கிழமை) முதல் மக்களை சந்திக்க உள்ளார்.
முதலாவதாக அவர் நாளை தென்காசி மாவட்டத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இதற்காக இன்று இரவு தென்காசிக்கு வரும் சசிகலா, குற்றாலத்தில் ஒரு தனியார் விடுதியில் தங்குகிறார்.
அதனைத்தொடர்ந்து நாளை மாலை 3 மணி அளவில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார். காசிமேஜர்புரத்தில் தொடங்கி இலஞ்சி, தென்காசி நகர், கீழப்புலியூர், மேலப்பாட்டாக்குறிச்சி ஆகிய இடங்களில் மக்களை சந்திக்கிறார்.
சுந்தரபாண்டியபுரத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, சுரண்டை, குருங்காவனம், வி.கே.புதூர், வீராணம், ஊத்துமலை ஆகிய இடங்களில் மக்களை சந்திக்கிறார்.
2-வது நாளாக நாளை மறுநாள்(வியாழக்கிழமை) கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியிலும், 19-ந்தேதி சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிகளிலும், 20-ந்தேதி வாசுதேவநல்லூர் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார்.
இதனையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சசிகலா வருகையையொட்டி அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து அவர் மற்ற மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.