தமிழ்நாடு (Tamil Nadu)

கோவையில் நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி பெற முடியாதது ஏன்?

Published On 2024-06-07 10:00 GMT   |   Update On 2024-06-07 10:00 GMT
  • ஒவ்வொரு முறையும் தேசிய அளவிலும் கோவை தொகுதி கவனம் பெற்று வருகிறது.
  • கமல்ஹாசன், தனது முதல் தேர்தலை கோவையில் தான் சந்தித்தார்.

சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் எந்த தேர்தல் வந்தாலும் கோவை தொகுதி அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட கூடிய தொகுதியாக மாறுகிறது. ஒவ்வொரு முறையும் தேசிய அளவிலும் கோவை தொகுதி கவனம் பெற்று வருகிறது.

பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அந்த கட்சியில் உள்ள மிக முக்கியமான பிரமுகர்கள் இங்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவதே கோவை நட்சத்திர தொகுதி அந்தஸ்தை பெற்று வருவதற்கான காரணமாக உள்ளது.

என்னதான் நட்சத்திர வேட்பாளர்கள் ஒரு நட்சத்திர பிம்பத்துடன் போட்டியிட்டாலும் கோவை தொகுதியில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இங்கு போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் உள்ளூர் வேட்பாளர்களிடம் தோற்று 2-வது இடத்தை தான் அவர்களால் பிடிக்க முடிந்துள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது, தமிழகத்தில் அ.தி.மு.க.வும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. கோவை தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ஜ.க.வை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்தியிலும் பா.ஜ.க அரசு அமைந்தது. ஆனால் 13 மாதங்களிலேயே வாஜ்பாய் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இதனை தொடர்ந்து 1999-ம் ஆண்டு மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.கவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. கோவை தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து கம்யூனிஸ்டு சார்பில், பொதுவாழ்வில் நேர்மையானவர், எளிமையானவர் என அறியப்படும் ஆர்.நல்லக்கண்ணு போட்டியிட்டார். கோவை எப்போதும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு செல்வாக்கு மிகுந்த பகுதியாகவே இருந்து வருகிறது. இதனால் எப்படியும் தங்களுக்கு தான் வெற்றி நிச்சயம் என நினைத்தனர்.

ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்தன. தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆர்.நல்லக்கண்ணுவால் 2-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

மக்கள் நீதிமய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், தனது முதல் தேர்தலை கோவையில் தான் சந்தித்தார். கோவை தெற்கு தொகுதியில் அவர் போட்டியிட்டார்.

அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசனை தோற்கடித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறிவந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கடைசி நேரத்தில் கோவை தொகுதியில் களமிறக்கப்பட்டார். முடிவில் அவர் 4.50 லட்சம் வாக்குகள் பெற்று 2-ம் இடத்தையே பிடித்தார். தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5.68 லட்சம் வாக்குகள் பெற்று எம்.பி.ஆனார்.

இதுவரை நடந்த பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில், கோவை பாராளுமன்ற, சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வெளியூரை சேர்ந்த நட்சத்திர வேட்பாளர்கள் தொடர் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ளனர்.

மாறாக அவர்களை எதிர்த்து போட்டியிடும் உள்ளூர் வேட்பாளர்கள் இங்கு ஆதிக்கம் செலுத்தி வெற்றியை நிலைநாட்டி வருகிறார்கள்.

இதனால் வரும் காலங்களில் நட்சத்திர வேட்பாளர்கள் கோவையில் போட்டியிட தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:-

சாதி பின்னணி கொண்ட, சாதி பின்னணி ஏதும் இல்லாத நட்சத்திர வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் இறங்கி தோற்பது கோவையில் ஆடுபுலி ஆட்டமாக நடந்து வருகிறது.

தேர்தல் அரசியலை பொறுத்தவரை ஒவ்வொரு தொகுதியில் வசிக்கும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் பிரதான வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆளுமை மிக்க தலைவர்களே, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினருக்கு தான் தேர்தலில் அதிக வாய்ப்பு அளித்தது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

ஆர்.நல்லக்கண்ணு, கமல், அண்ணாமலை, ஆகியோர் தேர்தல் களத்தில் அதிகம் பணியாற்றினாலும் அவர்களால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பி.ஆர்.நடராஜன், தி.மு.க.வை சேர்ந்த கணபதி ராஜ்குமார் ஆகியோர் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்பதாலும், கட்சியிலும் அடிமட்ட நிலை வரை இணைப்பு இருந்ததாலும் வெற்றி பெற்றுள்ளனர். எனவே நட்சத்திர வேட்பாளர்களாக களம் இறங்கினாலும் வெளியூர்காரர்களை கோவை மக்கள் அங்கீகரிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News