சங்ககிரி, ஓமலூர், ஏற்காட்டில் கனமழை- கடும் குளிரால் மக்கள் தவிப்பு
- ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
- மழையால் அங்குள்ள வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
சேலம்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
சேலம் மாநகரில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சேலம் 4 ரோடு, 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை, அஸ்தம்பட்டி, நெத்திமேடு, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இதே போல ஏற்காட்டில் நேற்று மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை கன மழை கொட்டியது. தொடர்ந்து இரவிலும் சாரல் மழையாக நீடித்தது. மேலும் பனி மூட்டமும் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.
இதனால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஸ்வெட்டர் மற்றும் மழை கோட் அணிந்தபடி பொதுமக்கள் சாலைகளில் நடமாடி வருகிறார்கள். ஏற்காட்டில் கடும் குளிரால் அங்கு வசிக்கும் தொழிலாளர்களும் கடும் அவதிப்படுவதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
இதே போல ஓமலூர், சங்ககிரி, டேனீஸ்பேட்டை உள்பட பல பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இந்த மழையால் அங்குள்ள வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 28.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 8.8, ஏற்காடு 20, வாழப்பாடி 3.2, ஆத்தூர் 2.2, கெங்கவல்லி 5, தம்மம்பட்டி 6, கரியகோவில் 2, எடப்பாடி 9.2, ஓமலூர் 23.5, டேனீஸ்பேட்டை 16 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 132.2. மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.