தமிழ்நாடு

ஆட்சியில் பங்கு என்பது குழப்பத்தை ஏற்படுத்தி விடும்- துரை வைகோ

Published On 2024-10-30 06:07 GMT   |   Update On 2024-10-30 06:07 GMT
  • தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் விஜய்யின் சேவை தேவை.
  • யாரோ சொல்கிறார்கள் என்று முடிவெடுத்து மதவாத சக்திகளுக்கு ஆதரவாக போய் விடக்கூடாது.

சென்னை:

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் கூறியிருப்பது குறித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரான திருச்சி எம்.பி. துரை வைகோ பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஆட்சியில் அதிகார பகிர்வு குறித்து விஜய் கூறியிருப்பது தேவையற்ற குழப்பத்தையும், சர்ச்சையையும் உருவாக்கும். அதிகாரப் பகிர்வு விசயத்தில் ஏனைய கட்சிகள் முனைப்பு கொண்டிருந்தால் அது அவர்களுக்கே உரியது. ஆனால் ம.தி.மு.க. அந்த நிலைப்பாட்டில் இல்லை.

தற்போது இருக்கக்கூடிய அரசியலில் மதவாத பிரிவினை வாதிகளை எதிர்க்கும் இரண்டாவது அணியாக திராவிடம் இருக்கிறது. அதற்கு பிறகு 3-வது அணிக்கு வாய்ப்பு குறைவுதான்.

எனவே மதவாத சக்திகளுக்கு மறைமுகமாக வாய்ப்பு கொடுக்கக் கூடிய சூழல் ஏற்படக்கூடாது. தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் விஜய்யின் சேவை தேவை. எனவே அவர் யோசித்து நிதானமாக முடிவெடுக்க வேண்டும். யாரோ சொல்கிறார்கள் என்று முடிவெடுத்து மதவாத சக்திகளுக்கு ஆதரவாக போய் விடக்கூடாது.

ம.தி.மு.க.வை பொறுத்தவரை தி.மு.க. ஆட்சியில் பல நிதி நெருக்கடி இருந்தாலும், நல்ல ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. ம.தி.மு.க., தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் நல்ல விசயங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறோம்.

கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி குரல் கொடுத்தோம். எனவே ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் அமைச்சரவையில் இடம் தேவை என்ற சமீபத்திய கோரிக்கை அவர்களுடைய இயக்க நிரவாகிகளின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றனர். அது தவறு இல்லை. அது அவர்களுடைய ஆசை. ஆனால் ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News