செய்திகள் (Tamil News)

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்போம் - இம்ரான் கான்

Published On 2018-06-26 12:51 GMT   |   Update On 2018-06-26 12:51 GMT
பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மக்களவையில் 272 இடங்கள் பொது தொகுதிகளாகவும், 60 இடங்கள் மகளிர் மட்டும் போட்டியிடும் தொகுதிகளாகவும், 10 இடங்கள் சிறுபான்மை இனத்தவர்களுக்கான தொகுதிகளாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய பாராளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷரிப்) தலைமையிலான கூட்டணி கட்சிகளின் பலம் 199 ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் 137 ஆகவும் உள்ள நிலையில் வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம் என தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

எங்கள் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் ஆட்சி நடைபெறும் கைபர் பகதுங்வா மாகாணத்தில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுவதாக குறிப்பிட்ட இம்ரான் கான் நேர்மையான தலைவரால் மட்டுமே நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது அதிக அனுபவம் இல்லாமலே நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றோம். மக்களின் செல்வாக்குடன் இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என தெரிவித்துள்ளார். #ImranKhan #PakistanElection
Tags:    

Similar News