செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மேலும் ஒரு மேயர் சுட்டுக் கொலை

Published On 2018-07-03 13:57 GMT   |   Update On 2018-07-03 13:57 GMT
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று ஒரு நகர மேயர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு மேயரை மர்ம நபர்கள் படுகொலை செய்தனர்.
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள் மீது அந்நாட்டு அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கும், தேடி கண்டுபிடித்து சுட்டுக் கொல்லவும் அந்நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்டட்ரே போலீசார் மற்றும் ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, சுமார் ஏழரை லட்சம் பேர் சரண் அடைந்துள்ளனர். 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் பிரபல அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் போலீசாரின் தேடுதல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மின்டானாவோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த டட்டு சவுதி அம்பட்டுவான் நகர மேயர் சம்சுதீன் டிமாவ்கோம் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட சுமார் 4,200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பட்டாங்காஸ் மாகாணத்தின் டனுவான் நகர மேயர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியின்போது அந்நகரின் மேயர் அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது தூரத்தில் இருந்து பாய்ந்துவந்த ஒரு தோட்டா, மேயரின் மார்பை துளைத்து சென்ற காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னதாக, போலீசாரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களை தெரு வழியாக ஊர்வலமாக அழைத்து சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி கொல்லப்பட்ட அதிர்ச்சி அந்நாட்டு மக்களிடம் இருந்து இன்னும் விலகாத நிலையில் நுயேவா எகிஜா மாகாண தலைநகரில் இன்று காரில் சென்ற நகர மேயர் பெர்டினாண்ட் போட்டே(57) என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இன்று சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் 18 தோட்டாக்கள் சிதறிகிடந்ததாக தெரிவித்த போலீசார், இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். #secondPhilippinemayor #Philippinemayor #FerdinandBote
Tags:    

Similar News