உலகம்

இலங்கை அதிபராக பதவியேற்றார் அனுர குமார திசநாயக

Published On 2024-09-23 05:01 GMT   |   Update On 2024-09-23 05:01 GMT
  • வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
  • முடிவில் அனுர குமார திசநாயக மொத்தமாக 57 லட்சத்து 40 ஆயிரத்து 179 வாக்குகளை பெற்றார்.

இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 2022-ல் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு நடந்த முதல் அதிபர் தேர்தல் இதுவாகும்.

இந்த தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்பட 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. இதை தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

இலங்கை தேர்தலை பொறுத்தவரை 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றிப் பெற்று அதிபராவார். ஆனால் அனுர குமார திசநாயக 56 லட்சத்து 34 ஆயிரத்து 915 (42.31 சதவீதம்) வாக்குகளை பெற்றிருந்தார். சஜித் பிரேமதாசா 43 லட்சத்து 63 ஆயிரத்து 35 (32.8 சதவீதம்) வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்கே 2 லட்சத்து 29 ஆயிரம் (17.27 சதவீதம்) வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

ஆனால் வெற்றிக்கு தேவையான 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை எந்தவொரு வேட்பாளரும் பெறாததால் 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை (விருப்ப வாக்குகளை எண்ணுவது) நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேர்தல் கமிஷன் தலைவரின் அறிவிப்பை தொடர்ந்து விருப்ப வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. இதில் அனுர குமார திசநாயக மற்றும் சஜித் பிரேமதாசா ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இருப்பினும் முதன்மை வாக்கு எண்ணிக்கையை போலவே விருப்ப வாக்குகள் எண்ணிக்கையிலும் அனுர குமார திசநாயக தொடர்ந்து முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அனுர குமார திசநாயக மொத்தமாக 57 லட்சத்து 40 ஆயிரத்து 179 வாக்குகளை பெற்றார். இதன் மூலம் அனுரா குமார திசநாயகே வெற்றி வாகை சூடினார்.

வெற்றியை தொடர்ந்து இலங்கையின் 9-வது அதிபராக அனுர குமார திசநாயக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

Tags:    

Similar News