செய்திகள் (Tamil News)

இங்கிலாந்து அணி எதை ஆயுதமாக நினைத்ததோ, அதே சோதனையாக அமைந்தது

Published On 2019-06-27 13:08 GMT   |   Update On 2019-06-27 13:08 GMT
உலகக்கோப்பைக்கு முன் சேஸிங்கில் கிங்காக விளங்கிய இங்கிலாந்து அணிக்கு, சேஸிங்கே சோதனையாக அமைந்து பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் கோப்பையை போட்டியை நடத்தும் இங்கிலாந்து கைப்பற்றும் என விமர்சகர்கள் ஆணித்தரமாக கூறினார்கள். இதற்கு காரணம் உண்டு. இங்கிலாந்து அதன் சொந்த மைதானத்தில் உலகக்கோப்பைக்கு முன் கடந்த 19 போட்டிகளில் சேஸிங் செய்யும்போது தோல்வியை கண்டதே கிடையாது. மேலும், முதலில் பேட்டிங் செய்தால் எளிதாக 300 ரன்களை கடந்து விடும்.

ஆனால் உலகக்கோப்பை தொடரில் தனது 2-வது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் 349 ரன் இலக்கை எட்ட முடியாமல் 14 ரன்னில் தோல்வியடைந்தது. இங்கிலாந்தின் தொடர் சேஸிங் வெற்றிக்கு பாகிஸ்தான் முற்றுப் புள்ளி வைத்தது.

முதல் ஐந்து போட்டிகளில் மூன்றில் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சேஸிங் செய்தது.

6-வது போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இருந்துதான் இங்கிலாந்துக்கு சோதனை ஆரம்பித்தது. இலங்கை நிர்ணயித்த 233 ரன்னை சேஸிங் செய்ய முடியாமல் 212 ரன்னில் சுருண்டது. இதனால் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.

அதன்பின் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 285 ரன்கள் சேர்த்தது. பின்னர் 286 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 221 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்தது.

அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது. இரண்டிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு உள்ளது என்ற நிலை உள்ளது.



சொந்த மைதானத்தில் சேஸிங் செய்வதில் கிங்காக விளங்கியதால் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால் சேஸிங் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்து சிக்கலில் மாட்டியுள்ளது. இலங்கை சேஸிங் வாய்ப்பை கொடுத்தது. அதையும் செய்ய இயலவில்லை.

எதை பலம் என்று நினைத்து களம் இறங்கியதோ, அதை அந்த அணிக்கு மிகப்பெரிய பாதகமாக முடிந்துள்ளது.

Similar News