செய்திகள் (Tamil News)

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழா 21–ந்தேதி தொடங்குகிறது

Published On 2016-07-07 05:59 GMT   |   Update On 2016-07-07 05:59 GMT
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா வருகிற 21–ந்தேதி தொடங்குகிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குருதட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக பரிகார தலங்களில் குருவுக்கு உரிய பரிகார தலமாக விளங்கும் இந்த கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. இங்கு ஆண்டு தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.



அதன்படி இந்த ஆண்டு அடுத்த மாதம்(ஆகஸ்டு) 2-ந்தேதி 9.30 மணி அளவில் குருபகவான் சிம்மராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம் இக்கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது. அப்போது குருபகவானுக்கு தீபாராதனை காட்டப்படும்.

விழாவை முன்னிட்டு குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழா வருகிற 21-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை முதல்கட்டமாகவும், குரு பெயர்ச்சிக்கு பின் ஆகஸ்டு 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 2-வது கட்டமாகவும் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல்இரவு 7.30 மணி வரையிலும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய துறை உதவி ஆணையர் மற்றும் கோவில் செயல் அலுவலர் ரா.சாத்தையா, அறநிலைய உதவி ஆணையரும், தக்காருமான செ.சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Similar News