செய்திகள்
அண்ணாமலையார் கிரிவலம் சென்ற காட்சி.

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்: இன்று இரவு மறுவூடல் நிகழ்ச்சி

Published On 2018-01-16 06:17 GMT   |   Update On 2018-01-16 06:17 GMT
இன்று அதிகாலை அண்ணாமலையார் கிரிவலம் கொண்டு செல்லப்பட்டார். இன்று இரவு அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் இடையே மறுவூடல் வைபவம் நடக்கிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று திருவூடல் திருவிழா நடந்தது. இதனையொட்டி அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் சுற்றி வந்தனர்.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவூடல் திருவிழாவின்போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டதையடுத்து அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார். அண்ணாமலையார் மட்டும் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார். இரவு முழுவதும் அங்கேயே தங்கினார்.

இன்று அதிகாலை அண்ணாமலையார் கிரிவலம் கொண்டு செல்லப்பட்டார். சாமியுடன் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலபாதையில் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், மாலை அணிவித்தும் தரிசனம் செய்தனர்.

8 லிங்கங்கள் முன்பாக சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அண்ணாமலையார் கொண்டு வரப்பட்டார்.

இன்று இரவு அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் இடையே மறுவூடல் வைபவம் நடக்கிறது.

இதில் சுந்தரமூர்த்தி நாயனார் சமரசம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதனையடுத்து அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 

Similar News