புதுச்சேரி

புதுச்சேரி பா.ஜனதா வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி

Published On 2024-03-05 09:31 GMT   |   Update On 2024-03-05 09:32 GMT
  • பா.ஜனதா நாடு முழுவதும் முதற்கட்டமாக 195 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
  • பா.ஜனதா வேட்பாளர் வலுவானவராக இருக்க வேண்டும் என கட்சித்தலைமை விரும்புகிறது.

புதுச்சேரி:

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா நாடு முழுவதும் முதற்கட்டமாக 195 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் புதுவை பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளரும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதுவை பா.ஜனதா வேட்பாளர் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை.

யூனியன் பிரதேசமான புதுவை 4 பிராந்தியமாக உள்ளது. இதனால் 4 பிராந்தியத்திலும் அறிமுகமான வேட்பாளரை அறிவித்தால்தான் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும்.

இந்த நிலையில் புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி, புதுவை மாநில தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் புதுவைக்கு வந்தனர்.

இவர்களை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசினார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பா.ஜனதா மாநில தலைவர் செல்வ கணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, ராமலிங்கம், அசோக்பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.

அப்போது புதுவை தொகுதியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அமைச்சர் நமச்சிவாயம் உட்பட 3 பேர் பட்டியலில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என ஆலோசிக்கப்பட்டது. இதில் முடிவு எட்டப்படவில்லை. இதன்பின் ரங்கசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பா.ஜனதா வேட்பாளர் வலுவானவராக இருக்க வேண்டும் என கட்சித்தலைமை விரும்புகிறது. இதற்கெல்லாம் தகுதி உடையவரான தற்போதைய அமைச்சர் நமச்சிவாயத்தை புதுவை தொகுதியில் களம் இறக்கலாம் என கட்சியின் நிர்வாகிகள் பரிந்துரை செய்தனர்.

ஆனால், அமைச்சர் நமச்சிவாயம், தொடர்ந்து புதுவை அரசியலில் இருப்பதையே விரும்பி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மறுத்து வருகிறார்.

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் இவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். இதை முன்வைத்து எதிர்கட்சியினர் பிரசாரம் செய்வார்கள். இதனால் அவர்களை போட்டி களத்தில் இறக்கவும் பா.ஜனதா தலைமை தயங்குகிறது.

அதேநேரத்தில் புதுவையை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. நியமன எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி கேட்கின்றனர். ஆனால் இவர்களால் பலன் கிடைக்குமா? என்ற சந்தேகம் பா.ஜனதா தலைமைக்கு தொடர்கிறது. இதுவரை புதுவை தொகுதிக்கு சரியான வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயத்தைத்தான் கருதுகின்றனர். அவர் தொடர்ந்து மறுத்து வருவதால் பா.ஜனதா வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணியில் புதுவை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் தற்போதைய சிட்டிங் எம்.பி. வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுவார்.

வைத்திலிங்கம் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். அமைச்சர், முதலமைச்சர், சபாநாயகர், எம்.பி. என பல பதவிகளை வகித்தவர். இவையெல்லாம் அவருக்கு சாதகமாக இருக்கும்.

ஒருவேளை தி.மு.க.வுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டாலும், புதுவையில் பலமான கட்சி தி.மு.க. என்பதை நிரூபிக்க கடுமையான தேர்தல் பணிகளை தி.மு.க.வினர் செய்வார்கள்.

Tags:    

Similar News