புதுச்சேரி

புதுச்சேரியில் பா.ஜனதாவை வீழ்த்திய ரேசன் கடை, சிறுமி பாலியல் விவகாரம்

Published On 2024-06-05 03:54 GMT   |   Update On 2024-06-05 03:54 GMT
  • ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கையாக வைத்து வந்தனர்.
  • என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு கண்டு கொள்ளவில்லை.

புதுச்சேரி:

புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது.

ஆட்சி அமைந்த நாளிலேயே முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பெண்களை கவரும் வகையில் சிலிண்டருக்கு மானியம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை, குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித் தொகை, புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை ஆகியவற்றையும் வழங்கினார்.

இதனால் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசுக்கு நற்பெயர்தான் இருந்தது. இந்த நற்பெயருக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் முத்தியால்பேட்டையில் சிறுமி கஞ்சா போதையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது புதுச்சேரி மக்கள டையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை எதிர் கட்சிகளான காங்கிரசும், தி.மு.க.வும் கையில் எடுத்து பிரசாரம் செய்தனர்.

புதிய ஆட்சி அமைந்தவுடன் ரெஸ்டோ பார் திறந்தது, கஞ்சா உட்பட போதைப்பொருட்களை கட்டுப்படுத்த தவறியது, நெரிசல் மிகுந்த நகரமாக புதுச்சேரியை மாற்றி விட்டனர் என காங்கிரஸ், தி.மு.க.வினர் பிரசாரம் செய்தனர்.

மேலும் கடந்த ஆட்சியில் மூடப்பட்ட ரேசன் கடைகளை புதிய அரசு மீண்டும் திறக்கவில்லை. ரேஷன் கடைகளை திறக்காத விவகாரத்தை எதிர்கட்சிகள் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சென்றனர். பெண்கள் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவதை விரும்பவில்லை.

ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கையாக வைத்து வந்தனர். ஆனால் அதனை என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு கண்டு கொள்ளவில்லை. இதையே பிரசாரமாக காங்கிரஸ் பயன்படுத்தியது. மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், ரேசன் கடைகள் மூடிக்கிடக்க என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசுதான் காரணம் எனக்கூறி பிரசாரம் செய்தார். இது காங்கிரசின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்துள்ளது.

Tags:    

Similar News