தொழில்நுட்பம்

சியோமி Mi 8 வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2018-05-23 06:42 GMT   |   Update On 2018-05-23 06:42 GMT
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi 8 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்:

சியோமி நிறுவனத்தின் Mi 8ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மே 31-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு Mi 6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நேரடியாக Mi 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டிருக்கிறது. 

சியோமி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Mi 8 என அழைக்கப்படுகிறது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் சியோமி சொந்தமாக உருவாக்கிய 3D முக அங்கீகார தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Mi 8 ஸ்மார்ட்போன் ஷென்சென் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது வெய்போ மூலம் அறிவிக்கப்பட்ட நிலையில், சியோமி குளோபல் செய்தி தொடர்பாளர் புதிய வெளியீடு எட்டாவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.



முன்னதாக வெளியான தகவல்களில் சியோமி வெளியீட்டு நிகழ்வுக்கான அனுமதி சீட்டுக்கள் ஏற்கனவே விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. இத்துடன் Mi 8 ஸ்மார்ட்போன், Mi பேன்ட் 3 ஃபிட்னஸ் டிராக்கர் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி வெளியீட்டு நிகழ்வில் 5000 பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி Mi 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

புதிய Mi 8 ஸ்மார்ட்போனில் நாட்ச் வடிவமைப்பு கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் சார்ந்த MIUI புதிய பதிப்பு வழங்கப்படும் என்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்துக்கு இணையான முக அங்கீகார வசதியை வழங்கும் நோக்கில் சியோமி நிறுவனம் Mi 8 ஸ்மார்ட்போனின் முன்பக்கம் பிரத்யேக கேமரா யூனிட் வழங்கலாம் என கூறப்படுகிறது. புதிய Mi 8 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அமையும்.
Tags:    

Similar News